Tuesday, March 19, 2024
Home » பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கூற்றுக்கு வழக்கு தொடர முடியாது

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கூற்றுக்கு வழக்கு தொடர முடியாது

by sachintha
December 1, 2023 6:31 am 0 comment

உரிய கவனம் செலுத்தப்படுமென்கிறார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கூற்றொன்றை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்துக்கிணங்க பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கூற்றொன்றை அடிப்படையாகக்கொண்டு வழக்குத் தொடுக்க முடியாதென சபையில் குறிப்பிட்ட அவர், அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்வியொன்றுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது, ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயமொன்று தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற விடயமாகும். அதனால் இந்த விடயத்தில் தலையிட்டு அவரது சிறப்புரிமையை பாதுகாக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற அதிகாரங்களும் சிறப்புரிமைகளும் சட்டத்தின் முதலாம் பிரிவின் 3 மற்றும் 04 இன் கீழ் பேச்சு மற்றும் விவாதத்துக்கான சுதந்திரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாராளுமன்றத்தில் பேசப்படும் விடயம் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு வெளியில் எத்தகைய விசாரணையையும் மேற்கொள்ள முடியாது.

அதேவேளை, அதனை அடிப்படையாகக்கொண்டு குடியியல் மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளுக்கு ,அல்லது கைது செய்யப்படுவதற்கு சம்மந்தப்பட்டவரை ஆளாக்கவும் முடியாது.

இவ்வாறான நிலையில்,ரொஷான் ரணசிங்க சபையில் தெரிவித்த கருத்தொன்றை அடிப்படையாக்கொண்டு

பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகள் சட்டத்தை முற்றாக மீறி, ஒரு சிலரால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ரொஷான் ரணசிங்கவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள சபாநாயகர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றை அடிப்படையாகக்கொண்டு எம்,பி, ஒருவருக்கு எதிராக யாராவது வழக்கு தொடுத்தால், அந்நபரை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. இதன்படி அவர் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT