ஒழுங்கின்றி செயற்பட்ட விமல், பிரசன்னவுக்கு பாராளுமன்றம் வர தடை | தினகரன்

ஒழுங்கின்றி செயற்பட்ட விமல், பிரசன்னவுக்கு பாராளுமன்றம் வர தடை

ஒழுங்கின்றி செயற்பட்ட விமல், பிரசன்னவுக்கு பாராளுமன்றம் வர தடை-Wimal Weerawansa-Prasanna Ranaweera Banned From Parliament

 

மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றம்

(மகேஸ்வரன் பிரசாத்)

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணவீர எம்.பிக்கு நான்கு வாரங்களும், விமல் வீரவன்ச எம்.பிக்கு இரண்டு வாரங்களும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விஜயகலா எம்பியின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய கருத்து தொடர்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடந்த ஜூலை 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதன்போது பிரசன்ன ரணவீர எம்பி சபை நடுவில் வந்து செங்கோலை பறித்துச் செல்ல முயற்சித்தார். எனினும், படைக்கல சேவிதர்கள் அந்த முயற்சியை முறியடித்திருந்தனர். அதேநேரம் விமல் வீரவன்ச எம்பி சபாநாயகர் ஆசனத்துக்கு முன்னால் வந்து சபாநாயகரை கடுமையாக திட்டினார். சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

அதற்கமைவாகவே இவர்களுக்கு இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கக் கோவை மற்றும் சிறப்புரிமை தொடர்பானகுழு, கடந்த செப்டெம்பர் 05 இல் இரு உறுப்பினர்களுக்கும் எதிரான இத்தீர்மானத்தைக் கையளித்திருந்தது.

அதற்கமைய இன்று (21) இடம்பெற்ற அமர்வின்போது, பிரசன்ன ரணவீர எம்பிக்கு நான்கு வாரங்கள் தடைசெய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 41 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஜே.வி.பி வாகெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதன் பின்னர் இரண்டாவது தீர்மானமான விமல் வீரவன்ச எம்பிக்கு எதிரான 2 வார சபை அமர்வு தடை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

புதிதாகத் திருத்தியமைக்கப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவைக்கு அமைய, செங்கோலைத் தொடுவதற்கு முயற்சிக்கும் உறுப்பினர்கள் நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்வதிலிருந்து இடைநிறுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...