ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது | தினகரன்

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக்கூடாது எனத் தெரிவித்து புதுவை கடற்கரையிலுள்ள காந்தி சிலையருகே நேற்று வாலிபர் ஒருவர் திடீர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை அறிந்த பொலிஸார் விரைந்து சென்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததன் பின்னர் அவரை விடுவித்தனர்.

அந்த இளைஞர் புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது 33) என்று தெரியவந்தது.

ராஜீவ்காந்தி, குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட போது காஞ்சிபுரத்தை சேர்ந்த தர்மன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். அவருடைய மகனே இந்த ராஜ்குமார் என்றும் தெரியவந்ததுள்ளது.

போராட்டம் தொடர்பாக ராஜ்குமார் கூறியதாவது:-

நாங்கள் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர்கள். எனது தந்தை தர்மன் காஞ்சிபுரம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ராஜீவ் காந்தி பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தார்.

அப்போது அங்கு நடந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்துவிட்டார். எனது தாயார் பெயர் வேதவல்லி. எங்கள் பெற்றோருக்கு மலர்விழி, ராஜசேகர் மற்றும் நான் ஆகிய 3 குழந்தைகள்.

எனது தந்தை இறக்கும்போது எனது தாயாருக்கு 32 வயது. எனது அக்காள் மலர்விழிக்கு 12 வயது, அண்ணன் ராஜசேகருக்கு 11 வயது. நான் 8 வயது சிறுவனாக இருந்தேன்.

தந்தை திடீரென இறந்து விட்டதால் நாங்கள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தோம். மிகவும் கஷ்டப்பட்டோம். எங்கள் தாயாருக்கு படிப்பறிவு கிடையாது. கருணை அடிப்படையில் தொழில்பெற வேண்டும் என்பது கூட தெரியாது. தந்தை இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு எனது தாயாருக்கு தொழில் கொடுத்தார்கள். அதை வைத்து கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.

எனவே இதற்கு காரணமான கொலையாளிகளை விடுவிக்கக்கூடாது. அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில் மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்.

அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கூடாது. அப்படியானால் அப்பாவியான எங்கள் தந்தை போன்றவர்கள் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பேற்பது என்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...