விமல், பிரசன்ன சபை அமர்வுகளில் பங்கேற்க தடை | தினகரன்

விமல், பிரசன்ன சபை அமர்வுகளில் பங்கேற்க தடை

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரசன்ன ரணவீர எம்.பி நான்கு வாரங்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டதுடன், விமல் வீரவன்ச எம்.பி இரண்டு வாரங்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டது. விஜயகலா எம்.பியின் கருத்துக்கு எதிராக சபையில் தகாத முறையில் நடந்து கொண்டமைக்காகவே இவர்களுக்கு இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இரு உறுப்பினர்களுக்கும் எதிரான பாராளுமன்ற அமர்வுத் தடை குறித்த தீர்மானங்கள் சபையின் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டன.

ஒழுக்கக் கோவை மற்றும் சிறப்புரிமை தொடர்பானகுழு கடந்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி இரு உறுப்பினர்களுக்கும் எதிரான இத்தீர்மானத்தைக் கையளித்திருந்தது. பிரசன்ன ரணவீர எம்பி நான்கு வாரங்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளத் தடை விதிப்பதாக இந்தக் குழுவின் முதலாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதற்கு சபை இணங்குகிறதா என சபாநாயகர் வினவியபோது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இதற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். இதற்கமைய கோரம் ஒலிக்கப்பட்டு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரசன்ன ரணவீர எம்பிக்கு நான்கு வாரங்கள் தடைசெய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 41 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஜே.வி.பி உறுப்பினர்கள் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதன் பின்னர் இரண்டாவது தீர்மானமான விமல் வீரவன்ச எம்பிக்கு எதிரான தீர்மானம் சபை முதல்வரினால் சபைக்கு அறிவிக்கப்பட்டது.

இரண்டு வாரங்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள விமல் வீரவன்சவுக்கு தடைவிதிக்கப்படுவதாகக் கூறினார். இதற்கு எதிராகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பை கோரினர். இதற்கு முன்னர் பிரசன்ன ரணவீர எம்பி சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விமல் வீரவன்சவுக்கு தடைவிதிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன், எல்.ரி.ரி.ஈயினர் மீண்டெழவேண்டும் என்ற சாரப்பட கருத்துக் கூறியிருந்தார்.

இதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடந்த ஜூலை 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர். விஜயகலா மகேஸ்வரன் எம்பிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறி சபையில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பிரசன்ன ரணவீர எம்பி சபை நடுவில் வந்து செங்கோலை பறித்துச் செல்வதற்கு முயற்சித்தார்.

எனினும், படைக்கல சேவிதர்கள் அந்த முயற்சியை முறியடித்திருந்தனர். அதேநேரம் விமல் வீரவன்ச எம்பி சபாநாயகர் ஆசனத்துக்கு முன்னால் வந்து சபாநாயகரை கடுமையாக திட்டினார். சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அஜித்.பி.பெரேரா சபாநாயகரிடம் முறையிட்டிருந்தார். இதற்கு அமைய இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஒழுக்கக் கோவை மற்றும் சிறப்புரிமை தொடர்பான குழு விசாரணை நடத்தியது.

சம்பந்தப்பட்ட இரு உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். இந்தக் குழுவின் அறிக்கை கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனை சபை முதல்வர் நேற்று அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை என்பன புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. புதிய நிலையியற் கட்டளைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிலையியற் கட்டளைக்கு அமைய செங்கோலைத் தொடுவதற்கு முயற்சிக்கும் உறுப்பினர்கள் நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்வதிலிருந்து இடைநிறுத்தப்படலாம்.

 


Add new comment

Or log in with...