Tuesday, March 19, 2024
Home » கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு அமெரிக்க அரசு -உதவிகள் வழங்கும்

கடற்றொழில் துறை அபிவிருத்திக்கு அமெரிக்க அரசு -உதவிகள் வழங்கும்

by sachintha
December 1, 2023 6:00 am 0 comment

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அமைச்சர் டக்ளஸிடம் உறுதி

இலங்கையின் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக தொழில்நுட்ப ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து (29) உரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் இலங்கை கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக அமெரிக்க அரசின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் கடலட்டை உள்ளிட்ட நீர் வேளாண்மைத் துறையை அபிவிருத்தி செய்வது மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமரிக்க அரசாங்கத்தின் உதவிகள் மிகவும் இன்றியமையாததென அமைச்சர் அமெரிக்க தூதரிடம் எடுத்துரைத்தார்.

இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கு, குறிப்பாக கடற்றொழில் துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவையென சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒத்துழைப்புடன் புதிய கடற்றொழில் சட்டமொன்று தயரிக்கப்பட்டு வருவதாகவும் அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு மாகாண சபை முறையே, என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்; அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இம் முறை வரவு-செலவு திட்டத்தில் மக்களின் நன்மைக்காகவும் நாட்டின் அபிவிருத்திக்காகவும் சிறந்த பிரேரணைகளை ஜனாதிபதி முன் வைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் அதனை விமர்சித்தாலும் கூட இது அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஒரு வரவு-செலவு திட்டமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT