ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம் | தினகரன்

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்; செலான் வங்கியின் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவராக செலான் வங்கியின் ஊழியரான தர்ஜினி சிவலிங்கம் திகழ்கிறார்.

ஆசியாவின் மிகவும் உயரமான வலைப்பந்தாட்டவீரராக அமைந்துள்ள தர்ஜினி, தமது சிறந்த ஆளுமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கை அணிக்கு சிங்கப்பூருக் கெதிராக 69 – 50 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தார்.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வலைப்பந்தாட்ட நட்சத்திரமாக திகழும் தர்ஜினி, வங்கித் தொழிலை மேற்கொண்டுவருகிறார். 2005 இல் செலான் வங்கியுடன் இவர் இணைந்து கொண்டார்.

இந்த வெற்றி தொடர்பில் தர்ஜினி தெரிவிக்கையில்,'எனக்கு இந்தவெற்றி பெருமளவு பெருமையையும், அணியை எண்ணி பெரும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 9 ஆண்டுகளின் பின்னர் நாம் ஆசிய சம்பியன் கிண்ணத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆணி அங்கத்தவர்களிடமிருந்தும் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்தும் எனக்கு கிடைத்த உதவி பாராட்டுக்குரியது. மேலும்,எனது எதிர்பார்ப்புகளுக்கு எப்போதும் பக்கபலமாக அமைந்திருக்கும் செலான் வங்கிக்கும் நான் நன்றிதெரிவித்தக் கொள்வதுடன், அவர்கள் எனக்கு வழங்கும் நெகிழ்ச்சியான பணியாற்றல் நேரம், அனுசரணைகள் மற்றும் ஆலோசனைகள் போன்றன பெறுமதி வாய்ந்தவையாக அமைந்துள்ளன' என்றார்.

அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், கடந்த மாதம் மாலாவிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போதும், ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளின் போதும் இலங்கையின் தேசிய வலைப்பந்தாட்ட அணிக்கான அனுசரணையை செலான் வங்கி வழங்கியிருந்தது. அணிக்கு அவசியமான ஆடைகள் மற்றும் வளங்களை வங்கி இதன்போது வழங்கியிருந்தது.

தேசிய மட்டத்தில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமைக்காக 2009 இல் தங்க பதக்கத்தை தர்ஜினி பெற்றுக்கொண்டார். 2011 இல் சிறந்த சூட்டருக்கான விருதும் வழங்கப்பட்டிருந்தது. 2012 இல் அவர் இலங்கை அணிக்கு சர்வதேச ரீதியில் தலைமைத்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Add new comment

Or log in with...