18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு | தினகரன்

18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பரீத் ஏ றகுமான்

18 ஆவது கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி நீர்கொழும்பில் நிறைவடையவுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்கும செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

எல்எஸ்ஆர் அமைப்பின் தலைவர் திலக் வீரசிங்க கருத்து தெரிவிக்கையில்:

நீர் மற்றும் இயற்கை சார்ந்த விளையாட்டுகளுக்கு முன்னோடியாக திகழும் Lanka Sportreizen நிறுவனம் கடந்த மூன்று தசாப்தங்களாக தனித்துவமான விளையாட்டுகளை ஏற்பாடு செய்து சாதனை படைத்திருப்பதோடு இலங்கையை ஒரு கேளிக்கை தலமாக பெயர்பெறச் செய்வதிலும் பெரும்பாடுபட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காகவே 1998 ஆம் ஆண்டில் LSR சர்வதேச மரதன் போட்டி காலியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததோடு, அது கடந்த 17 தொடர்களிலும் முன்னேற்றம் கண்டு ஆசிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் பிரதானமான ஒன்றாக மாறியுள்ளது.

சர்வதேச மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப்போட்டிகளுக்கான சம்மேளனத்தில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரே சர்வதேச மரதன் போட்டியாக இது உள்ளது.

AIMS இல் நெடுந்தூர ஓட்டப்போட்டிகளுக்கான நிர்வாக அமைப்பாக இருக்கும் IAAF இன் சர்வதேச மாநாட்டில் உலகில் 120 நாடுகளில் இடம்பெறும் 420 ஓட்டப் பந்தயங்களில் வாக்கு உரிமை பெற்ற 56 நாடுகளில் 54ஆவது உறுப்பு நாடாகவும் உள்ளது.

உலகின் அனைத்து கண்டங்களையும் சேர்ந்த 350க்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் உட்பட 47 நாடுகளின் 8500 போட்டியாளர்களின் பங்கேற்புடன் 2017 ஒக்டோபர் 8ஆம் திகதி இந்த போட்டியின் 17ஆவது தொடர் முடிவுற்றது.

இந்த ஆண்டு போட்டி, 18 ஆவது தொடராகும், விளையாட்டுத் துறை அமைச்சின் கால அட்டவணைக்கு உட்பட்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இலங்கையின் வர்த்தக நகரில் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை விளையாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக பல்வேறு பிரிவுகளிலும் கிட்டத்தட்ட 10,000 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளரான Lanka Sportreizen எதிர்பார்த்துள்ளது. போட்டி ஏற்பாட்டுக்கு மொத்தமாக கிட்டத்தட்ட 25 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதோடு பல்வேறு வெற்றியாளர்களுக்கும் 2.5 மில்லியன் ரூபாய் பகிர எதிர்பார்க்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான, மக்கள் ஒற்றுமையாக வாழும் இடம் என்று இலங்கையின் பெயரை மேலும் உயர்த்துவது.

பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கு ஒரு சிறந்த இடம் என இலங்கையின் புகழை உயர்த்துவது.

நாட்டின் பாடசாலை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வாறான போட்டிகளில் பங்கேற்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது.

சர்வதேச ஓட்ட வீரர்களுடன் போட்டியிடுவதன் மூலம் இலங்கையர்களின் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர சந்தர்ப்பம் வழங்குவது.

'ஆரோக்கியமான சமூகம்' என்ற கருத்தை ஊக்குவிக்கும் 'வேடிக்கை ஓட்டம்' என்ற கலாசாரத்தை இலங்கை சமூகத்தில் அறிமுகப்படுத்துவது.

இந்த போட்டி கொழும்பு 07, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஆரம்பமாகி, IAAF இனால் அளவிடப்பட்ட புதிய பாதை ஊடே நடைபெறவுள்ளது.

பௌத்தாலோக்க மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த புதிய பாதை பொரளை, தெமட்டகொடை, பேலியகொடை, வத்தளை, ஹமில்டன் கால்வாயை சுற்றி, பமுனுகம, தலஹேன, பிட்டபான மற்றும் தூவ வழியாக நீர்கொழும்பு பீச் பார்க்கை அடையவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, மேல் மாகாண சபை, நீர்கொழும்பு மாநகர சபை மற்றும் தொடர்புபட்ட ஏனைய மாநகர சபைகள், ஏனைய பிரதேச சபைகள், தடகள சம்மேளனம் மற்றும் அச்சு மற்றும் இலத்திரன் ஊடக நிறுவங்கள் இந்த போட்டிக்கு ஆதரவை வழங்குகின்றன.

'இலங்கை டீ–கப்' வீதி சைக்கிளோட்டப்போட்டி, 'ரம்பிள் இன் தி ஜங்கில்' – மலையேற்ற சைக்கிள் பந்தயம், 'விட்டேன் அமேசன்' சாகச சவால் போட்டி, 'தொழில்சார் அவுஸ்திரேலிய நீர்ச்சறுக்கு வீரர்களுடன் நீர்சறுக்கு போட்டி', 'இலங்கை கொல்ப் கிளசிக் போட்டி' என கடந்த காலங்களில் அந்த நிறுவனம் பல போட்டிகளையும் நடத்தியுள்ளது.

இவ்வாறான செய்பாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் இலங்கையை, பொழுதுபோக்கு அம்சங்களுக்கான சொர்க்கபுரியாக மாற்ற முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...