Thursday, April 18, 2024
Home » அரசியல் அநாதையாக்கும் நோக்கிலே எனக்கு சுகாதார அமைச்சு தரப்பட்டது

அரசியல் அநாதையாக்கும் நோக்கிலே எனக்கு சுகாதார அமைச்சு தரப்பட்டது

-அதனை வைத்தே உச்சத்தை தொட்டேன்

by sachintha
December 1, 2023 6:05 am 0 comment

அரசியல் அநாதையாக்கும் நோக்கத்திலேயே 2010 ஆம் ஆண்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகவும் எனினும், அப்பதவியை வைத்து ஜனாதிபதி பதவி வரை செல்ல முடிந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளில் இலங்கையின் சுகாதார சேவை பெரும் வரவேற்பைப்பெற்று வரும் நிலையில், அந்த நிலையை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசியல் ரீதியில் என்னை இல்லாதொழிக்கும் வகையிலேயே 2010ஆம் ஆண்டு எனக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இறுதியில் அதுவே,என்னை ஜனாதிபதி பதவி வரை உயர்த்திச் சென்றது.

நாட்டிலுள்ள 40 கிராம வைத்தியசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் அது நூறு என்ற எண்ணிக்கையை கடந்து செல்லலாம்.

பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் என்ற ஒரு சேவை சுகாதாரத் துறையில் காணப்பட்டது. அத்தகைய மருத்துவர்களை இவ்வாறு மூடப்பட்டு வரும் ஆஸ்பத்திரிகளுக்கு நியமிக்கலாம். இவ்வாறு செயற்பட்டால் வைத்தியசாலைகளை மூடாமல் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எனினும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்த சேவையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது.

பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்வது மட்டுமின்றி, நோய்களுக்கான சிகிச்சை ஆரம்ப சுகாதார சேவை ஆகியவற்றை முன்னேற்றுவது அவசியமாகும்.

போஷணை தொடர்பான அதிகாரிகள் சுகாதாரத்துறையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். அவ்வாறு அந்த அதிகாரிகள் உருவாக்கப்படுவதை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமே நிறுத்தியது.

கொரியா போன்ற நாடுகளில் பிரதேச மட்டத்தில் அவ்வாறான அதிகாரிகள் சேவையாற்றி வருகின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு போஷணை தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குகின்றனர். இதன் மூலம் நோய் நிவாரண நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். அவ்வாறான ஒரு வேலைத் திட்டம் எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்தினால் அது மிகவும் பொருத்தமானதாக அமையும்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT