பொலிஸ் மாஅதிபர் மீதான குற்றச்சாட்டு; விசாரணைக்கு மூவரடங்கிய குழு | தினகரன்

பொலிஸ் மாஅதிபர் மீதான குற்றச்சாட்டு; விசாரணைக்கு மூவரடங்கிய குழு

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார நேற்று தெரிவித்தார்.

இக் குழு முன்வைக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸ் மாஅதிபர் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படுவாரா? என ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, பொலிஸ் மா அதிபரை நியமிப்பதும் விலக்குவதற்குமான அதிகாரம் அமைச்சருக்கன்றி அரசியலமைப்புச் சபைக்கே உண்டு என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

பொலிஸ் மாஅதிபர் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் சுயாதீனமாகவே முன்னெடுக்கப்படுமென்றும் இதில் எவருடைய தலையீடும் இருக்காதென்றும் அமைச்சர் மத்தும பண்டார இதன்போது வாக்குறுதியளித்தார். அத்துடன் விசாரணைகளை இயலுமானவரை துரிதப்படுத்தி அறிக்கையை முன்வைக்குமாறு அமைச்சர் மூவரடங்கிய குழுவுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

"கடந்த அரசாங்கத்தில் அரசியல்வாதிகளின் அனுசரணையுடனேயே போதைவஸ்து கடத்தல் மிகப் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது அவ்வாறானதொரு சூழல் நாட்டில் இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் போதைப் பொருட்களின் கடத்தல்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் முன்வைக்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தவறாது பின்பற்றியமை காரணமாகவே நாட்டில் இச்செயற்பாடுகளை பெருமளவில் எம்மால் குறைக்க முடிந்துள்ளது. பொலிஸ் மாஅதிபர் மிகவும் பொறுப்புடனும் கண்டிப்புடனும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடியவர். அவர் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலான முழுமையான விசாரணைகள் முடிவடையும் வரை அவர் தொடர்பில் எம்மால் எந்தவொரு தீர்மானத்துக்கும் வர முடியாது," என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவிக்கையில்,

பொலிஸ் மாஅதிபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்பதற்காக அவர் தொடர்பிலான நல்ல செயற்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாதென குறிப்பிட்டார்.

பொலிஸ் மாஅதிபரிடம் குறைபாடுகள் இருக்கலாம், அதற்காக வேண்டுமென்றே அவர் மீது சிலர் சேறு பூசி வருகிறார்கள். கண்டி பெரஹெரவின்பொது ஆடாமல் சென்ற நடனக் கலைஞர்களை ஆடுமாறு அவர் கையை ஆட்டி சைகையில் காட்டியதை மட்டும் காட்சிப்படுத்தி பொலிஸ் மாஅதிபர் நடனமாடுவதாக பிரசாரம் செய்தார்கள். அதேபோன்று அவர் பாடசாலையொன்றில் ஆற்றிய உரையின் சில வசனத்தை மட்டும் எடுத்து வேறு அர்த்தம் புலப்படும் வகையில் அதனை காட்சிப்படுத்தி சேறு பூசி வருகிறார்கள். அந்த உரை முழுவதையும் நான் கேட்டுப்பார்த்தேன். உண்மையில் அது அர்த்தம் நிறைந்தது என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

எனக்குத் தெரிந்த வரை பொலிஸ் மாஅதிபர் தனது உரிமைகளைப் பெறக்கூட அதிக ஆர்வம் காட்டாத ஒருவர். இன்னமும் சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். அண்மையில்கூட அமைச்சர் காரை ஏன் மாற்றக்கூடாது என கேட்டதற்கு, இது போதும் என்று சாதாரணமாக பதிலளித்தவர் அவர்.அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான 129 பொலிஸ் அதிகாரிகளுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தவரென்றும் பிரதியமைச்சர் இதன்போது விளக்கமளித்தார்.

கடந்த அரசாங்கத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாகவே போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் பொலிஸ் மாஅதிபரின் கடுமையான செயற்பாட்டால் தற்போது அனைத்து நடவடிக்கைகளும் குறைவடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி: அப்படியானால் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படமாட்டாரா?

அமைச்சர்- அவரை நியமிக்கும் மற்றும் விலக்கும் அதிகாரம் என்னிடம் வழங்கப்படவில்லை. அரசியலமைப்புச் சபையே அதனை முன்னெடுக்கும்.

கேள்வி:- பொலிஸ் மா அதிபர் காசோலை பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதே?

அமைச்சர்- இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பொதுவாக அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின் முடிவில் உண்மை தெரியவரும்.

கேள்வி:- கடந்த அரசாங்கத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு உதவியவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். ஏன் அவர்கள் மீது நீங்கள் விசாரணைகளை நடத்தவில்லை?

அமைச்சர்: பிரதியமைச்சர்- அவர்கள் மீதான குற்றச்சாட்டு பகிரங்கமானது. ஆனால் விசாரணை செய்வதற்கு முறைப்பாடுகள் இல்லை. முன்னாள் அரசாங்கத்துக்கு பயந்த மக்கள் முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. அதனால் விசாரணைகளை தொடர முடியாமல் உள்ளது. ஆனால் இந்த அரசாங்கத்தில் அவர்களால் முதல் போன்று செயற்பட முடியாது. இந்த கேள்வியை அப்போது நீங்கள் கேட்டிருந்தால் வெள்ளை வேனில் கடத்தப்பட்டிருப்பீர்கள்.

கேள்வி:- பொலிஸ் மா அதிபர் சிறந்த பேச்சாளராக இருக்கிறார். 2020 இல் அவரை வேட்பாளராக களமிறக்கும் யோசனை ஐ.தே.கவுக்கு உள்ளதா?

அமைச்சர்,பிரதியமைச்சர்- அனைத்து சிறந்த பேச்சாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்று இல்லை. 1994 இலிருந்து எமது ஜனாதிபதி வேட்பாளரை இறுதி தறுவாயிலேயே நாம் களமிறக்குவோம். எதிரணியைப் போலன்றி எமது கட்சியைப் பொறுத்தவரை அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராக பொருத்தமானவர்கள் என்றும் பதிலளித்தனர்.

 


Add new comment

Or log in with...