கிராம சேவகர்களிடம் அனுசரணை கோரியிருந்தது ஏன்? | தினகரன்

கிராம சேவகர்களிடம் அனுசரணை கோரியிருந்தது ஏன்?

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட 'நில மெஹெவர' ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவை நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இடம்பெற்றதைப் போன்றே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவைக்கு அரசதுறை, தனியார் துறை மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் பெறப்படுவது வழமை. இதுபோன்றே தெல்லிப்பளையில் நடைபெற்ற நடமாடும் சேவையிலும் ஒத்துழைப்புப் பெறப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் நடமாடும் சேவைக்காக தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் கிராம சேவகர்களிடம் அனுசரணை கோரி கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை தொடர்பில் 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

நில மெஹவர ஜனாதிபதி உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவை காலி, அநுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் 11 தேர்தல் தொகுதிகள் மற்றும் 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 350,000 பிரச்சினைகளுக்கு 53 அமைச்சுக்களின் ஊடாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக அரச துறை, தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புக்களின் ஒத்துழைப்புக்கள் பெறப்படுகின்றன. ஏனைய மாவட்டங்களைப் போன்று யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான ஒத்துழைப்புக்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு பெறப்படும் ஒத்துழைப்புக்கள் குறித்து பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் கணக்காளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு அறிவிக்கப்படுவதுடன், சகல செயற்பாடுகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள். நடமாடும் சேவை பூர்த்தியடைந்ததும் அது தொடர்பான கணக்குகள் அமைச்சுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

 

 


Add new comment

Or log in with...