முகேஷ் அம்பானி மகளுக்கு நிச்சயதார்த்தம் | தினகரன்

முகேஷ் அம்பானி மகளுக்கு நிச்சயதார்த்தம்

முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிராமலுக்கும் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாளை 23-ம் திகதி வரை இந்தத் திருமண நிகழ்ச்சிகள், விருந்து, விஷேசங்கள் என நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இத்தாலியில் உள்ள லேக்கோமோ என்ற இடத்தில் மிகவும் ஆடம்பரமான முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடத்தப்பட உள்ளது. இதில் விருந்தினர்களுக்குப் பிரம்மாண்டமான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விருந்தில் நடன நிகழ்ச்சிகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் ஆனந்த் பிராமலும் சிறுவயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். ஹர்வார்ட் பல்கலையில் ஆனந்த் எம்.பி.ஏ. முடித்து பிராமல் மருந்து நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இஷா அம்பானி எம்.பி.ஏ. முடித்தவர். யேழ் பல்கலைக்கழகத்தில் இளநிலை மனோதத்துவவியலும் இஷா அம்பானி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். கடந்த மே மாதம் ஆனந்த் பிரமால் தனது காதலை இஷா அம்பானியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

கடந்த மே மாதம் இஷா அம்பானியின் சகோதரர் ஆகாஷ் அம்பானிக்கும் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இரட்டையர்களில் இளையவரான இஷா அம்பானிக்கும் இப்போது நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. ஆனால் தனது சகோதரருக்கு முன்பாகவே இஷா அம்பானி திருமணம் செய்து கொள்வார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...