டொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால் | தினகரன்

டொலர் பெறுமதி அதிகரிப்பு உலகம் எதிர்கொள்ளும் சவால்

அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு தொடர்ந்து ஏணியின் உச்சிவரை உயர்ந்து கொண்டே போகின்றது. நாளாந்தம் இந்த நிலை தொடர்வதால் எமது நாட்டின் ரூபாவின் பெறுமதி குறைந்த வண்ணமே காணப்படுகின்றது. இதன் காரணமாக நாடு பாரிய சவாலை எதிர்கொள்ளும் நிலை தொடர்கிறது. இந்த விடயம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. எமது நாட்டு ரூபாவின் பெறுமதியை தக்கவைக்க அரசு தவறி வருவதாக கூட்டு எதிரணி பெரும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளதை வைத்து கூட்டு எதிரணிக்கு வெறும் வாய்க்கு பாக்கு, வெற்றிலை கிடைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்த ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுப்பதற்கு அந்நிய செலாவணியை சந்தைக்கு விட முடியாது என்பதை நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆணித்திரமாக எடுத்துரைத்திருக்கின்றார். இவ் விடயத்தில் அரசு பொறுப்பற்ற விதமாக நடந்துகொள்வதாக கூறும் குற்றச்சாட்டை நிதியமைச்சர் முற்று முழுதாக நிராகரித்துள்ளார். ஏனெனில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு உலக நாடுகளையும் சவாலுக்குட்படுத்தியுள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி கூட மோசமாகப் பாதித்துள்ளது. இதேபோன்று டொலருக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டவண்ணமே உள்ளனர்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை தடுப்பதன் பொருட்டு அந்நியச் செலாவணியை சந்தைக்கு விடுமாறு எதிரணித் தரப்பு விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. அந்நியச் செலாவணியை சந்தைக்கு விடுவதால் பிரச்சினை தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அது நாட்டில் பெரும் பொருளாதாரச் சிக்கலை தோற்றுவிக்க முடியும் என பொருளாதாரவிற்பன்னர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாணய மதிப்பிறக்கத்தைச் சரிசெய்வதற்கு இதனைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றொரு நெருக்கடிக்கு நாடு முகம் கொடுக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எதிரணித் தரப்பு இந்த விடயத்தில் நாட்டு மக்களுக்கு மாயஜால வித்தை காட்ட முற்படுகின்றது. இதனை அரசுக்கு எதிரானதொரு சூழ்ச்சியாகக் கூட நோக்க முடிகிறது. ஆட்சிக் கவிழ்ப்புக்கனவில் ஆழ்ந்து போயிருக்கும் கூட்டு எதிரணியினர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வஞ்சகத்தன்மை கொண்டதாகவே பார்க்க முடிகின்றது. உலகளாவிய மட்டத்தில் காணப்படும் இப்பிரச்சினையை எதிரணியினர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முனைகின்றனர். இதன் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கமே குடிகொண்டிருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சிக் காலப் பகுதியில் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தவதில் அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றது. கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதிலேயே நல்லாட்சி அரசு பெரும் முனைப்புக்காட்டி வருகின்றது. இந்த வருடத்தில் 4.5 பில்லியன் டொலரை கடனுக்காக செலவிட்டது. அடுத்த வருடத்திலும் 4.5 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது. அந்த நெருக்கடியிலிருந்து விடுபடத் தவறினால் நாடு பொருளாதார ரீதியில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடலாம்.

அமெரிக்க டொலருக்கு நிகரான எமது நாட்டு நாணயத்தின் விலை வீழ்ச்சி கண்டிருப்பது குறுகிய காலச் சவாலாகவே நோக்கவேண்டியுள்ளது. உலக நாடுகள் இந்த விடயத்தில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன. மாற்று வழி தேடுவதில் பல்வேறு நாடுகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. உலகம் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினையில் நாம் தனிமைப்பட்டு விடமுடியாது. அரசாங்கம் டொலருக்கு நிகரான இலங்கை பெறுமதியை பேணுவதில் உறுதியாக இருப்பதாக நிதியமைச்சர் எடுத்துரைத்துருக்கின்றார். அரசு சவாலுக்கு முகம் கொடுத்து காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டு எதிரணியினர் குழம்பிய குட்டையில் மீன்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்குள் தள்ளி பாரிய வெளிநாட்டுக் கடனுக்குள் நாட்டைத் தள்ளிவிட்டுச் சென்ற ராஜபக்ஷ முகாம் இன்று ஒன்றுமே அறியாத சின்னக் குழந்தைகள் போன்று செயற்பட முனைகின்றனர். என்னவோ நாட்டை இன்றைய அரசுதான் படு குழிக்குள் தள்ளிவிட்டது போன்று பேச முற்படுகின்றனர். அன்று அவர்கள் வாரிச்சுருட்டிக்கொண்டது போன்று மற்றவர்களையும் பார்க்க முற்படுகின்றனர்.

வெளிநாட்டுக் கையிருப்புகளை சந்தைக்கு விட்டு நாணய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முயற்சித்தால் அடுத்த வருடத்தில் மற்றொரு சர்வதேச அழுத்தத்துக்குள் நாடு சிக்கும்நிலை ஏற்படலாம். ராஜபக்ஷ முகாமின் கடன் சுமையை எமது எதிர்காலச்சந்ததிக்கு விட்டுவைக்க முடியாது என்பதில் அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அவர்கள் விட்ட மாபெரும் தவறினை மற்றவர்களும் விட வேண்டுமென ராஜபக்ஷ முகாம் விரும்புகின்றது. நாட்டின் மீதான அவர்களது பற்றுறுதி இதுதானா எனக் கேட்க வேண்டியுள்ளது.

2015 க்குப் பின்னர் நல்லாட்சி அரசு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பாரிய சவாலைப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டிருப்பதை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 3.7 வீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தைவிட .6 வீத அதிகரிப்பாகும். நாட்டை அபிவிருத்தி, பொருளாதாரம் இரண்டிலும் மேலோங்கச் செய்யக்கூடிய தொலைநோக்குடனான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தான் அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பால் உள்நாட்டு நாணய மதிப்பிறக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலையானதல்ல எந்த நேரத்திலும் மாற்றம் நிகழலாம். இந்த விடயத்தில் அமெரிக்கா கூட பயணப்பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளது. இன்றேல் உலகம் பாரியதொரு நெருக்கடிக்குள் சிக்கும்நிலை ஏற்பட்டு விடலாம் என்பதை சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை நோக்க முடிகிறது.


Add new comment

Or log in with...