சிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு | தினகரன்

சிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு

ஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் ஆகியோர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை நிறுத்திவைக்க கடந்த புதனன்று உத்தரவிட்டதுடன், உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கும் ஆணை இட்டது.

முன்னர், கடந்த ஜூலை மாதம், லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக நவாஸ் ​ெஷரீப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அடிடாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் மற்றும் மகள் மரியம் நவாஸ் இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மேலும், பலத்த பாதுகாப்புகளுடன் வீட்டிற்கு சென்ற ஷெரீப்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் லாகூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு வரை வீதியில் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் புகார் எழுந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது.

அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.


Add new comment

Or log in with...