வட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார் | தினகரன்

வட கொரியாவுடன் பேச்சை ஆரம்பிக்க அமெரிக்கா தயார்

வட கொரியாவை 2021 ஆம் ஆண்டு அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் இலக்குடன் அந்த நாட்டோடு மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டது தொடக்கம் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.

எனினும் இந்த வாரம் நடைபெற்ற இரு கொரியாக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் வட கொரியாவின் பிரதான ஏவுகணை தளத்தை மூடுவதற்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜொங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்காக வட கொரியா சென்ற தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இது முன்னெப்போதும் நிகழான ஒன்றாக இருந்தது.

இந்த உச்சி மாநாட்டின் முடிவில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக்களைவுக்கு கிம் இணக்கம் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இது முக்கிய கடப்பாடாக இருப்பதாக பொம்பியோ குறிப்பட்டுள்ளார்.

அடுத்த வாரம் நியூயோர்க்கில் சந்திப்பு ஒன்றுக்காக வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யொங் –ஹோவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

“வட கொரியாவில் வேகமான அணு ஆயுதக்களைவை செயற்படுத்தும் வகையிலேயே அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும். தலைவர் கிம் உடன்பட்டது போன்று 2021 ஜனவரியில் பூர்த்தியாவதாக இது இருக்கும் என்பதோடு கொரிய தீபகற்பத்தில் நிலையான மற்றும் இறுதியான அமைதியை ஏற்படுத்துவதாக அமையும்” என்று அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...