கொலை சதித்திட்டம் நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை | தினகரன்

கொலை சதித்திட்டம் நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படுமென்றும் இதில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் தலையீடு இருக்காதென்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். சி.ஐ.டி விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படுவதனை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உறுதி செய்யுமென்றும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது பொலிஸ் மா அதிபர், குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபருடன் இணைந்து களனி விகாரைக்குச் சென்றிருப்பதனால் இந்த விசாரணையில் நம்பகத்தன்மை இருக்குமா? என ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக கிடைக்கப்பெற்றிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. எனினும் ராஜபக்ஷ யுகத்தில் போன்று வெறுமனே குற்றச்சாட்டை மாத்திம் அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியரான பிரதி பொலிஸ் மா அதிபருக்கெதிராக எவ்வித தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தில் விசாரணைகள் முடிவடைந்து உண்மை கண்டறியப்படும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித விளக்கமளித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, -

பொலிஸ் திணைக்களத்துக்கு தகவல் வழங்கும் நபரே பிரதி பொலிஸ்மா அதிபரின் ஒலிப்பதிவு நாடாவை வெளியிட்டுள்ளார். இதற்கான பின்னணிக் காரணம் என்னவென்று எமக்கு தெரியாது. ஏற்கனவே ரோஹிங்கியா பற்றி தகவல் வழங்கியமைக்காக பொலிஸ் திணைக்களம் அந்நபருக்கு 15 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலும் அந்நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதற்குரிய சன்மானம் அவருக்கு இன்னும் வழங்கப்படவில்லையென்றும் தெரியவந்துள்ளது. அதன் காரணமாகத்தான் அவர் இந்த ஒலி நாடாவை வெ ளியிட்டிருப்பதாக கூறப்படுகின்றபோதும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அது தன்னுடைய குரல் அல்லவென மறுத்துள்ளார். எது எவ்வாறானாலும் இரண்டு தரப்பினரிடமிருந்தும் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பிரதி பொலிஸ் மா அதிபர் ஓர் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் ஒழுங்கு விதிமுறைகளுக்கமையவே அவர் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அனைத்தும் சுயாதீனமானவை. பொறுப்புக்கள் மற்றும் கடமை அடிப்படையில் பொலிஸ் மா அதிபருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபருக்குமுடையில் நெருங்கிய தொடர்புஉண்டு. அவர்கள் ஒரு இடத்துக்கு சேர்ந்து சென்றதற்காக இது தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணையில் தலையிட மாட்டார். விசாரணைகளில் தவறு இடம்பெற்றால் தட்டிக் கேட்க சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இருக்கிறதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் மா அதிபர் இதற்கு முன்னர் பதவியிலிருந்த ஏனைய பொலிஸ் மா அதிபரிலும் வித்தியாசமாக அழுது,பாடி,நடித்து,தியானம் செய்வது ஏற்றுக்ெகாள்ளக்கூடிய விடயமா என ஊடகவியலாளர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் ராஜித சேனாரத்னவும் என்னாலும் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது தான் என்று பதிலளித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...