ஹிஸ்புல்லாஹ், மகன் உட்பட 4 பேருக்கு பிணை | தினகரன்

ஹிஸ்புல்லாஹ், மகன் உட்பட 4 பேருக்கு பிணை

குற்றத்தடுப்பு பிரிவினரின் அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல உத்தரவு

வாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தலா 2 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபா 2 சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, நாட்டை விட்டு வெளிநாடு செல்வதாயின் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

4 சந்தேக நபர்களும் சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் ஆஜராகினர்.

இவ்வழக்கு வாழைச்சேனை மாவட்ட/ நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது வழக்கின் நிகழ்வுகள் மற்றும் விசேட குற்றத்தடுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட 'டீ' அறிக்கை மற்றும் மேலதிக அறிக்கை என்பவற்றை நீதிமன்றம் பரீசீலனை செய்தது. சந்தேக நபர்கள் சார்பில் முன்​வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சந்தேக நபர்களை 2 இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபா 2 சரீரப் பிணையிலும் செல்ல அனுமதியளித்தது. இவ்வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதி மீண்டும் வாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சிறிநாத் பெரேரா, நசீம் கிம்மத் ஆகியோரும் சட்டத்தரணி எம்.எம்.முகமட் ராசீக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

100 மில்லியன் ருபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் 14.8.2018 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பொலிஸ் மாஅதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு தினைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதிகளினால் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் கட்டட நிர்மாண நிறுவனத்திற்கு எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில் பொலிஸ் மாஅதிபர் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று வாகரை பிரதேச செயலார் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமாணப் பணிகள் வேறொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்மாணப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ் வழக்கு தொடர்பாக வாழைச்சேனை மாவட்ட / நீதவான் நீதிமன்ற நீதிபதி முகமட் றிஸ்வான் சந்தேக நபர்களை எதிர்வரும் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாசிக்குடா நிருபர்


Add new comment

Or log in with...