அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Amith Weerasinghe & 33 Others Further Remanded Till Jun 11

 

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் 05 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள், கடை, வீடுகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கைதான மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேருக்கும் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (14) தெல்தெனிய நீதவான் எம்.எச். பரிக்தீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டோர், குறித்த இனக் கலவர சம்பவங்களை அடுத்து, பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால், பல்வேறு இடங்களில், பல்வேறு தினங்களில், கைது செய்யப்பட்டிருந்தனர்.

இனவாத தாக்குதல்கள், கடை எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் மார்ச் 08 ஆம் திகதி, பொலிஸ் தீவிரவாத தடுப்புப் பிரிவினால் அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மீது, கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டமை மற்றும் இன கலவரத்தை ஏற்படுத்தியமை, மத ஸ்தலங்களை உடைத்தல், தீக்கிரையாக்கியமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...