அபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை | தினகரன்

அபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை

நூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று அபிவிருத்திக்காக ஏங்கி நிற்கின்றது.

இது கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வைத்தியசாலை பலரின் முயற்சியால் இவ்வருட ஆரம்பத்தில் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுகாதார அமைச்சர் நேரடியாக விஜயம் செய்து அவசர சிகிச்சைப் பிரிவை தற்காலிகமாகத் திறந்து வைத்தார்.

மறுமுறை விஜயம் செய்து 3 கோடி ருபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள 2மாடி விடுதிகட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை நட்டுவைத்தார்.

ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பது அங்குள்ள குறைபாடாகும்.

திருக்கோவில் பிரதேசபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன் கூறுகையில் "மிகப் பழைமை வாய்ந்த இவ்வைத்தியசாலையில் இரத்தவங்கியோ சத்திரசிகிச்சை கூடமோ இல்லை.

மேலும் இங்கு ஒரு பிரேத அறை உண்டு.ஆனால் குளிருட்டி இல்லாமையினால் பிரேதத்தை வைக்க முடியாத நிலையுள்ளது.பெயருக்கு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதில் அர்த்தமில்லை. உண்மையில் ஆளணிமுகாமைத்துவத் திட்டப்படி 16வைத்தியர்கள் இருக்க வேண்டும். ஆனால் இன்றிருப்பதோ 5 வைத்தியர்கள்.

எதையெடுத்தாலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது. எந்த இனத்தின் போராட்டத்தால் மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த இனத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதென்பது கவலைக்கும் வேதனைக்குமுரியது. அதற்கு வழிவகுத்த அரசியல் மேதைகளுக்கு இது சமர்ப்பணம்" என்றார்.

வைத்திய அத்தியட்சகர் ​ெடாக்டர் மோகனகாந்தன் . மேலும் ஒரு முஸ்லிம் ஆண்வைத்தியர். மற்றவர் பெண் சிங்கள வைத்தியர். அவர் மகப்பேற்றிற்காக செல்லவிருக்கிறார். இருவரும் இடமாற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருக்கோவிலைச் சேர்ந்த ​ெடாக்டர் தமிழ்தாசன் உள்ளார். பதிவு வைத்தியராக டாக்டர் மீனா. இவர் விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார்.

இந்தநிலையில் ஆக வைத்திய அத்தியட்சகர் மோகனகாந்தனும், வைத்தியர் தமிழ்தாசனும்தான் எஞ்சுவார்கள்.

சத்திரசிகிச்சைக்கூடத்தின் உபகரணங்களுக்கென அமைச்சர் மனோகணேசன் 2கோடி 60லட்சருபாவை ஒதுக்கியுள்ளதாக ஊடகங்களில் காணமுடிந்தது. இருந்தும் அதற்கான கட்டடத்திற்கு மேலும் 3கோடி ருபா தேவையாகின்றது.

கடந்த 13ஆம் திகதி அம்பாறையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்து அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமுகமாக அமைச்சர் தயாகமகே அந்த 3கோடி ருபா நிதியை தான் ஒதுக்குவதாக கூறியுள்ளார்.

அங்கு இணைத்தலைவரான எம்.எஸ்.உதுமாலெவ்வை குரல் கொடுக்கையில் "இது எமது பிரதேச வைத்தியசாலை. அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பிரதேச மக்களுக்கு மத்தியிலிருக்கும் முக்கிய வைத்தியசாலை. அந்த தமிழ்மக்களுக்கு சுகாதார வசதி வேண்டும். ஆனால் அங்கு அடிக்கல்லை நட்டு வைத்து ஒன்றுமே நடக்கவில்லையென க்கூறப்பட்டது. அதற்கு உரிய பதில் அளிப்பது மட்டுமன்றி உரிய தீர்வையும் வழங்க வேண்டும்" என்றார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜனிடம் கேட்ட போது "திருக்கோவில் வைத்தியசாலை அண்மையில்தான் ஆதாரவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவசரசிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டது. ஆனால் அடிப்படைவசதிகள் உட்கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. ஆதலால் அங்குள்ள மக்கள் இவ்வவைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென இருதடவைகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

அண்மையில் உரிய வசதியின்றி ஒரு நோயாளி பலியாகியதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்திருப்பதனால் இவ்வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது அவசியம்" என்றார். இவ்வாறு அரைமணிநேரம் இப்பிரச்சினை இழுபட்டதைக் கண்டு அமைச்சர் தயாகமகே தலையிட்டு "அந்த உட்கட்டுமானப் பணிகளுக்கு எவ்வளவு தேவை ?" எனக் கேட்டார். அதற்கு 30மில்லியன் ருபா என பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் பதிலளித்தார்.

"சரி.அதனை நான் தருகிறேன். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அந்த வேலைகளைச் செய்து முடியுங்கள். என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பொதுவாக கிழக்கில் தமிழ்ப் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதை பலரும் அடிக்கடி கூறிவருவதை அண்மைக் காலமாக ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது. அதில் திருக்கோவில் வைத்தியசாலையும் ஒன்று.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர் கிழக்கில் எந்தெந்த வைத்தியசாலைக்கு எவ்வளவு ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை பட்டியிலிட்டு சுட்டிக்காட்டி தமிழ் வைத்தியசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டதை ஊடகங்களில் வெளியிட்டார். பதிலுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பது வேறு விடயம்.

இவற்றின் வெளிப்பாடாக "திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை கல்முனை நிருவாகத்தின் கீழிருந்து விடுவித்து அம்பாறையுடன் இணையுங்கள்" என்றும் அம்பாறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

வி.ரி. சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...