நான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம் | தினகரன்

நான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்

'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது கேட்டு கருணாஸ் குமுறியுள்ளார். இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் திகதி ஜெயலலிதா மறைந்தார். அன்று இரவோடு இரவாக முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் சட்டசபை உறுப்பினர்களின் தலைவராகவும் சசிகலா தெரிவு செய்யப்பட்டார். இதனிடையே முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். பின்னர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், தன்னை சசிகலா குடும்பம்தான் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தது என்றார்.

இதையடுத்து ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் தனக்கு பேரவையில் ஆதரவை நிரூபிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டார். இதனிடையே சில எம்.எல்.ஏக்கள் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா 122 எம்.எல்.ஏக்களை கொண்டு சென்று கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைத்தார்.

இந்த கூவத்தூர் விடுதியைக் காண்பித்ததே கருணாஸ்தான். சசிகலாவுக்கு வலது கரம்போல் இருந்தவரும் கருணாஸ்தான். மேலும் அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு 'சகல வசதிகளை'யும் அவர் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏக்கள் கம்பி நீட்டாமல் இருப்பதை கருணாஸ் உறுதி செய்தார். இதனால் எடப்பாடி முதல்வராக பதவியேற்றார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அ.தி.மு.க அரசு தப்பியது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பேசிய கருணாஸ், "கூவத்தூரில் இந்த கருணாஸ் செய்த உதவிகளால்தான் இந்த அரசாங்கம் உருவானது" என்றும் "கூவத்தூர் விடுதியை கைகாட்டியதே நான்தான்" என்றும் பேசியுள்ளார்.

கூவத்தூர் முகாம் நாட்களின் போது முக்கிய பங்கு வகித்த கருணாஸ், அரசு, பொலிஸ் துறையை இப்படி விமர்சனம் செய்து பேசியுள்ளது ஏன் எனத் தெரியவில்லை. எனினும் கூவத்தூரினால்தான் அரசாங்கம் தப்பியது என்பதை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...