நல்லுணர்வின் வெளிப்பாடுகளே சமாதானத்தின் விளைநிலங்கள் | தினகரன்

நல்லுணர்வின் வெளிப்பாடுகளே சமாதானத்தின் விளைநிலங்கள்

உலகயுத்தத்தின் பாதிப்பினை உணர்ந்து பல நாடுகள் தமக்கிடையே அமைதி தினம் என ஒரு தினத்தை பிரகடனம் செய்து கொண்டாடி வந்தன. பின்னர் ஐ.நா பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் செம்டம்பர் 21ம் திகதி சர்வதேச அமைதி தினமாக 2002ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது.

ஐ.நா இதனை பிரகடனப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது முதலாம், இரண்டாம் உலகமகாயுத்தங்களின் பயங்கர அனுபவங்களாகும்.இதில் இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது ஆறு கோடி மக்களுக்குஅதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் தொண்ணூறு இலட்சம் பேர் அழிக்கப்பட்டனர்.

'மனித உள்ளங்களில்தான் போருக்கான காரணங்கள் தோன்றுவதனால்,மனித உள்ளங்களிலேதான் அமைதிக்கான அரண்களும் அமையப் பெறல் வேண்டும்' என்பது யுனெஸ்கோவின் முகப்புவாசகமாகும்.

உலக சமாதான முயற்சியின் போது ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961ம் ஆண்டு விமானவிபத்தின் போது உயிரிழந்தமை வரலாற்றுப் பதிவாகும்.

இன்று சர்வதேசரீதியில் உலக அமைதியை நேசிக்கின்ற நாடுகளிடையே முற்றிலும் போருக்காக மனோநிலையை களையும் முகமாக இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் ச​ைப இம்முறை அதன் சர்வதேச அமைதி தினத்தின் மகுடவாசகமாக சமாதானத்திற்கானஉரிமை என்பதைக் கொண்டுள்ளது.

நாடுகளில் மனிதஉரிமைகளையும்,கடமைகளையும் இன்றியமையாது செயற்படுத்துவதற்கு தேவைப்படுவது சமாதானமாகும். சுதந்திரமான,நியாயமான,சட்டஆட்சியுடைய சமத்துவம் ஒருமைப்பாடு என்பதுதான் சமாதானமாகும். சமாதானம்,மேம்பாடு,ஜனநாயகம் எனும் முக்கோணம் ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றது. இதில் ஏதேனுமொன்று வலுவிழக்கின்ற வேளையில் அந்நாடு சமாதானத்தின் திசையிலிருந்து நழுவிச் செல்கின்றது எனலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 'படை கொண்டுஅமைதியினை நிலைநாட்டல் அசாத்தியமானது. நல்லுணர்வுகளின் வெளிப்பாடுகளே சமாதானத்தின் விளைநிலங்களாக மாற முடியும்' என்றார்.

நவீன உலகில் மிகவும் விலை குறைந்ததொரு பொருளாக மாறிக் கொண்டிருப்பது மனித உயிர்களேயாகும். தனிமனிதன் ஒருவனின் கோபஉணர்வு ஒரு நாட்டின் மீதான போராக மாறி விடுகின்றது. அல்லது ஒரு இனத்தின் மீதான போராக மாற்றமடைகின்றது.

யுத்தத்தின் கோரம் இன்று உலகின் பல நாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மனிதஉயிர்களைப் பெறுமானம் உடையதாக நோக்க வேண்டும்.உலகிலுள்ள அனைவரையும் எமது உறவுகளாக காணும் கண்கள் வேண்டும். அப்போது மாத்திரமே நாம் போரில்லா உலகினைக் காண முடியும். அதுவரை அது ஒருஎட்டாக்கனியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆங்கிலேயேர் இந்தியாவை ஆட்சி புரிந்த காலத்தில் "அவர்கள் வேல்கள் கொண்டு வந்தார்கள், நாங்கள் அவர்களை துப்பாக்கிகளால் வென்று விட்டோம். அவர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள், நாங்கள் பீரங்கிகள் கொண்டு வென்று விட்டோம். அவர்கள் பீரங்கிகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள், நாங்கள் அவர்களை வெடிகுண்டுகளால் சிதறடித்தோம். இறுதியாக அவர்கள் மகாத்மா என்ற ஆத்மா துணையோடு அகிம்சையைக் கொண்டு எம்மை எதிர்த்தார்கள். அகிம்சையை வெல்ல எங்களிடம் ஆயுதம் எதுவுமில்லை. நாங்கள் அவர்களை விட்டு விலகி விட்டோம்' என்றனர்.

எமதுஅழகிய இலங்கைத்தாய் நாட்டினை உலகில் சிறந்த சமாதானம் மிளிரும் ஒரு நாடாக மாற்றியமைக்க ஒவ்வொருவரும் இந்நன்னாளில் உறுதி கொள்வோம்.

ஏ.எல்.எம். றிஸ்வி
காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலையம்


Add new comment

Or log in with...