யாழ். கோட்டையை இராணுவத்திடம் ஒப்படைத்தால் காணிகள் அனைத்தையும் விட்டு வெளியேறத் தயார் | தினகரன்

யாழ். கோட்டையை இராணுவத்திடம் ஒப்படைத்தால் காணிகள் அனைத்தையும் விட்டு வெளியேறத் தயார்

யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி

யாழ்.கோட்டையை இராணுவத்தினரிடம் கையளித்தால் யாழ். குடாநாட்டிலுள்ள பல காணிகளை மீளக் கையளிக்க இராணுவம் தயாராக உள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்று (20) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். யாழ். நகரில் நிலை கொண்டுள்ள இராணுவம் பல ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்து வருகிறது. எஞ்சிய காணிகளையும் விரைவில் கையளிக்க உள்ளோம். யாழ். கோட்டைப் பகுதியை இராணுவத்தினரிடம் கையளித்தால், யாழிலுள்ள இராணுவத்தினர் கோட்டைக்குள் நிலை கொண்டு ஏனைய காணி களையும் உரிமையாளர்களிடம் கையளிக்கத் தயாராகவுள்ளனர். இதற்காக ஜனாதிபதி, பிரதமர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

28,078 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பு

யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ். குடாநாட்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 23 ஆயிரத்து 78 ஏக்கர் நிலப் பகுதியை விடுவித்துள்ளோம். இது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 88.8 வீதமான நிலப்பகுதிகளென்றும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலவரப்படி யாழ்.குடாநாட்டில் பலாலி விமான நிலையத்தையும் சேர்த்து 74 ஏக்கர் நிலமே இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ளது. யாழ்.குடாநாட்டில் மட்டும் 1.39 ஏக்கர் நிலப் பகுதியையே இராணுவம் பயன்படுத்துகிறது.

மீளக் குடியமர்த்தப்படாத பகுதிகளிலுள்ள காணிகள் பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்காக எடுக்கப்பட்டுள்ளன. இக்காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் 500 ஏக்கர் நிலப் பகுதி பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படும்.

இராணுவ முகாம்களை பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் மீளவும் அமைப்பதற்கு பணம் பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நிதிகளை அரசாங்கம் உடனடியாக வழங்கினால் எதிர்வரும் ஆறு மாதத்திற்குள் பொதுமக்களின் அனைத்துக் காணிகளையும் விடுவிக்கத் தயார் என்றார்.

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருவது தொடர்பில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்:

யாழ்ப்பாணம் கோட்டை எம்மிடம் கிடைத்தால் யாழ்.குடாநாட்டிலுள்ள அனைத்து இராணுவ முகாம்களையும் கோட்டைக்குள் கொண்டு வந்து, பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிப்பதே எங்கள் திட்டம். இதுதொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட  5,000 பேருக்கு தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடு தலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளில் 5ஆயிரம் பேருக்கு கிளிநொச்சியில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். ஏனையவர்களுக்கும் விரைவில் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடு தலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் தொடர்பில் அக்கறை எடுத்து செயற்பட்டு வருகிறோம். அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் அரசுடன் பேசி வருகிறோம். அவர்களை நாங்கள் கைவிடவில்லை.

வேலை இல்லாமல் இருக்கும் முன்னாள் புலிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ளோம் என்றார்.

செல்வநாயகம் ரவிசாந்த், யாழ். விசேட நிருபர்


செல்வநாயகம் ரவிசாந்த், யாழ். விசேட நிருபர்

Add new comment

Or log in with...