டொலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதியை பேணுவதில் அரசு உறுதி | தினகரன்

டொலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதியை பேணுவதில் அரசு உறுதி

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தவேண்டிய தேவை இல்லாவிட்டால் வெளிநாட்டு கையிருப்புக்களை விற்பனை செய்து நாணய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமென நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கை மாத்திரம் எதிர்கொண்டுள்ள பிரச்சினையல்ல. உலக நாடுகள் பல இந்த நிலைமைக்கு முகங்கொடுத் துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தாலும், ஏனைய பொருளாதார குறிகாட்டிகள் சாதகமாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, ரூபாவின் மதிப்பிறக்கத்தைத் தடுப்பதற்கு மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்புக்களை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்தால் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்தவேண்டிய தேவை இல்லாவிட்டால் வெளிநாட்டுக் கையிருப்புக்களை விற்பனை செய்து நாணய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

கடந்த அரசாங்கம் பெற்ற பாரிய கடன் சுமையை குறைக்கவேண்டிய பொறுப்பு எமக்கு சுமத்தப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் பெரும் தொகையான பணத்தை கடனை மீளச் செலுத்தவே பயன்படுத்தினோம். 2019 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்துவதற்கு 4.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. 2020ஆம் ஆண்டும் இந்தளவு தொகை செலுத்தப்படவேண்டும். இதுவரை செலுத்திய தொகையில் 80 வீதம் மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்கான மீள் கொடுப்பனவுகளாகும்.

9.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு, கடன்களை மீளச் செலுத்திய பின்னர் 8.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது.

நாணய மதிப்பிறக்கத்தை சரிசெய்வதற்கு இதனைப் பயன்படுத்தினால் கடன்களை மீளச் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிழையான கொள்கைத் தீர்மானங்களை பாடமாகக் கொண்டு நாம் செயற்படுகின்றோம். 2011ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது ஏற்பட்ட நாணய மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த அப்போதைய அரசாங்கம் வெளிநாட்டுக் கையிருப்பிலிருந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தியது. 2012ஆம் ஆண்டு மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டது. சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்திய போதும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதியை அவர்களால் பேண முடியவில்லை. 113 ரூபாவாகக் காணப்பட்ட அமெரிக்க டொலர் 132 ரூபாவாக அதிகரித்தது. வெளிநாட்டு கையிருப்புக்களைப் பயன்படுத்தியபோதும் அவர்களால் நாணய மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் பேரினப் பொருளாதாரத்தை வலுவாகப் பேணுவதற்கு அல்லது பலப்படுத்துவதற்குரிய திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. கடந்த காலத்தில் எரிபொருள் இறக்குமதி மற்றும் வாகன இறக்குமதி அதிகரித்ததாலேயே இலங்கையிலிருந்து பெருந்தொகையான அமெரிக்க டொலர் வெளிச்சென்றன.

இதனைக் கட்டுப்படுத்தவே சிறிய ரக வாகனங்களுக்கான வரியை அதிகரித்தோம்.

டொலர் விலை அதிகரித்திருப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன இறக் குமதிக்காக கடனுறுதிக் கடிதத்தை (லெட்டர் ஒப் கிரடிட்) திறக்கும்போது வங்கியில் பேண வேண்டிய இருப்பை 100 வீதமாக மத்திய வங்கி அதிகரித்துள்ளது. இதுபோன்று டொலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதியை உறுதியாகப் பேண பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு இலங்கையை மாத்திரமன்றி பல நாடுகளைப் பாதித்துள்ளது. ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...