Friday, March 29, 2024
Home » டி20 உலகக் கிண்ணத்தின் 20 அணிகளும் தேர்வு: உகண்டா முதல் முறையாக தகுதி

டி20 உலகக் கிண்ணத்தின் 20 அணிகளும் தேர்வு: உகண்டா முதல் முறையாக தகுதி

by sachintha
December 1, 2023 6:00 am 0 comment

அடுத்து ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு 20 ஆவது மற்றும் கடைசி அணியாக உகண்டா தகுதி பெற்றுள்ளது. இதன்படி இந்த உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் உகண்டா தகுதி பெறுவது இது முதல் முறையாகும். நமீபியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் மூலம் ஏற்கனவே நமீபிய அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையில் டெஸ்ட் ஆடும் நாடான சிம்பாப்வே மற்றும் கென்ய அணிகள் தகுதியை இழந்தன.

உகண்டா இந்தத் தொடரில் ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று முதல் இரு இடங்களுக்கு முன்னேறியதை அடுத்து உலகக் கிண்ண தகுதியை உறுதி செய்தது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத்திற்கு போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணிகள் நேரடி தகுதி பெற்றன. முந்தைய 2022 டி20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களை பிடித்த இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு தகுதியை உறுதி செய்தன. டி20 தரவரிசையில் அடுத்து உச்ச தரநிலையை பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றன. மற்ற இடங்கள் பிராந்திய மட்டத்தில் இடம்பெற்ற தகுதிகாண் தொடர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டன. ஐரோப்பிய தகுதிகாண் தொடரின் மூலம் ஸ்கொட்லாந்து தெரிவானதோடு கிழக்காசிய பசிபிக் தகுதிகாண் சுற்று மூலம் பப்புவா நியுகினி அணி தேர்வானது.

அமெரிக்க தகுதிகாண் சுற்றில் வெற்றியீட்டிய கனடா தனது அண்டை நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. ஆசிய தகுதிகாண் சுற்றின்மூலம் நேபாளம் மற்றும் ஓமான் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறின.

2024 ஜூன் 3 தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் 20 அணிகளும் ஐந்து அணிகள் என நான்கு குழுக்களாக பிரித்து ஆரம்ப சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சுப்பர் 8 சுற்றில் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT