பொலிஸ் மாஅதிபரின் செயற்பாடு தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணை | தினகரன்

பொலிஸ் மாஅதிபரின் செயற்பாடு தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணை

பூஜித ஜயசுந்தரவை பதவிவிலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ கோரவில்லை

பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கோரிக்கை விடுக்கவில்லையென சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபரின் செயற்பாடு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம். சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

பூஜித்த ஜயசுந்தரவை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து விலகுமாறு , ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதியமைச்சர் நளின் பண்டார இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், இவ்வாறான எந்தக் கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை. இது தொடர்பில் நானும் அமைச்சர் மத்துப பண்டாரவும் கலந்துரையாடினோம். ஊடகங்களிலே இவ் வாறான செய்தியொன்று வெளியாகியிருந்தது. அவரை பதவியிலிருந்து விலகுமாறு பொலிஸ் ஆணைக்குழுவோ அல்லது எமது அமைச்சோ கோரிக்கை விடுக்கவில்லை என்றார்.

தொலைபேசி மூலம் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, பதவிவிலகும் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக பத்ம உதயசாந்த எம்பி சுட்டிக்காட்டினார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...