பொருட்களின் விலையை நியாயமின்றி அதிகரித்தால் கடும் நடவடிக்கை | தினகரன்

பொருட்களின் விலையை நியாயமின்றி அதிகரித்தால் கடும் நடவடிக்கை

* வாழ்க்கைச் செலவு குழுவுக்கு ஜனாதிபதி பணிப்பு
*முன்னைய ஆட்சியை விட  ஒப்பீட்டளவில் குறைந்த விலை

எரிபொருள் விலையதிகரிப்பைக் காரணமாகக் கொண்டு நியாயமற்ற முறையில் பொருட்களின் விலைகளை அதிகரிப்போர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாழ்க்கைச் செலவு குழுவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

விலைச் சூத்திரத்துக்கமைய உலக சந்தையுடன் எரிபொருள் விலை கூடும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் நியாயமற்ற முறையில் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்தார்.

இவ் வருடம் டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரித்து பின்னர் குறைவடையும் என்கின்றபோதிலும் 2019 ஆம் ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய நிம்மதி கிட்டுமென்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது பொருட்களின் விலையதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 05 ரூபாவால் அதிகரித்தால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 05 ரூபாவால் அதிகரிக்கின்றனர். இது நியாயமற்றது.இவ்வாறான நியாயமற்ற விலை அதிகரிப்புகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருளுக்கான விலைச்சூத்திரத்தை ஜனாதிபதி பகிரங்கமாக வெளியிட்டு வைத்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, இது அனைவருக்கும் கிடைக்க நிதி அமைச்சு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

நாட்டின் அனைத்து அத்தியாவசியப் பொருட்களதும் விலை கூடி குறைகின்றபோதும் அனைத்தும் 2014 ஆம் ஆண்டிலிருந்த ராஜபஷ ஆட்சியுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறதென்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

மக்கள் மீது அக்கறை இருப்பதன் காரணமாகவே பால் மா விலையை தொடர்ந்தும் அதே நிலையில் பேணி வருவதாகவும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மற்றும் மஹாபொல புலமைப் பரிசிலை அதிகரித்ததாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் 2ஆயிரத்து 396 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயு அதே வருடம் டிசம்பர் ஆகும்போது 1896 ரூபாவாக குறைக்கப்பட்டது. பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனவரியில் 1,596 ரூபாவாக மேலும் குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு பின்னர் 1,496 ரூபாவாகவும் அதே வருடம் நவம்பர் மாதம் 1,346ரூபாவாகவும் குறைக்கப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் அதன் விலை 1,321 ரூபாவாகும்.2017 செப்டம்பர் 26 ஆம் திகதியன்று மீண்டும் இவ்விலை 1,431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.2017 ஏப்ரல் 28 ஆம் திகதி 1,676 ரூபாவாகவிருந்த சமையல் எரிவாயு ஜூன் மாதமளவில் 1,538 ரூபாவாக குறைவடைந்தது. இதனையே தற்போது இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 1,733 ரூபாவாக அதிகரித்துள்ளோம்.

லக்ஷ்மி பரசுராமன் 

 


Add new comment

Or log in with...