டொலரின் பெறுமதி இந்திய ரூபாயிலும் 11% அதிகரிப்பு | தினகரன்

டொலரின் பெறுமதி இந்திய ரூபாயிலும் 11% அதிகரிப்பு

டொலரின் பெறுமதி இந்திய ரூபாவிலும் 11% அதிகரிப்பு-

 

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இதே நிலை

டொலரின் பெறுமதி இலங்கையில் மாத்திரமல்லாது அனைத்து நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்த அவர்,

தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் நிலவும் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளார். ஆயினும் அவ்வட்டி வீதம் இது வரை 0.2 போன்ற மிகக் குறைந்ததாக இருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அமெரிக்க முதலீடுகள் அல்லது இலகு கடன் வழங்கப்படும்போது, அதற்கு 1.5 அல்லது 2 வீத வட்டி கிடைக்கப்பெற்றது. அது அவர்களுக்கு அதிக இலாபகரமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் தங்களது நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ளாது ஏனைய நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டனர்.

இதனை தவிர்க்கும் பொருட்டு, ட்ரம்ப் அமெரிக்காவில் நிலவும் வட்டி வீதத்தை தொடர்ச்சியாக அதிகரித்தார். இதன் காரணமாக அந்நாட்டிலுள்ளோர், இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை குறைவடைந்ததோடு, அவர்களின் பணமும் அங்கு பாதுகாப்பாக பேணப்படும் என்பதன் காரணமாகவும், அதிக வட்டியை பெறும் நோக்குடனும் அங்கேயே முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக அமெரிக்க டொலர் முதலீடுகள் குறைவடைந்து, உலகிலுள்ள அனைத்து நாணயங்களின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் எமது நாணயத்தின் பெறுமதி 3.51 இனால் குறைவடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாவின் பெறுமதி 5.17 ஆக குறைவடைகின்றது.

நேற்றையதினம் (18) இந்திய ரூபாவின் பெறுமதி 11% ஆக குறைவடைந்த நிலையில் எமது (இலங்கை) ரூபாவின் பெறுமதி 6% இனாலேயே குறைவடைந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்திய ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி 11% இனால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, பாகிஸ்தான் ரூபா 5.03 ஆகவும் பிலிப்பைன்ஸின் பெசோ 5.18 ஆகவும், யூரோ 6.27 ஆகவும், லீரா 22.28 ஆகவும் பெறுமதி இழந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம், அமெரிக்க டொலருடன் இந்திய ரூபாயின் பெறுமதி 12.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக, இது தொடர்பில், இந்தியாவின் Economictimes வர்த்தக தளமானது செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...