Home » வகுப்பறையை உயிரோட்டமாக்கி, மாணவருக்கு உற்சாகமளிக்கும் கவின்நிலைப் போட்டிகள்

வகுப்பறையை உயிரோட்டமாக்கி, மாணவருக்கு உற்சாகமளிக்கும் கவின்நிலைப் போட்டிகள்

by sachintha
November 30, 2023 9:26 pm 0 comment

மகிழ்ச்சிகரமான சூழலே ஆர்வமுள்ள கற்றல், -கற்பித்தலுக்கான தூண்டுதல்களாகின்றன. வகுப்பறைகளை உயிரோட்டமாக்குவதில் வகுப்பறை கவின்நிலை முக்கிய பங்காற்றுகின்றது. புத்தகங்களோடும், மனனங்களோடும் மட்டுப்படுத்தப்படுகின்ற மாணவர்களை காட்சிப்படுத்தலூடாகக் கற்றலுக்குத் தூண்டும் செயற்பாட்டினை வகுப்பறைக் கவின்நிலை ஏற்படுத்தி விடுகின்றது.

கற்றலுக்கு ஆர்வமான மாணவர்களை அதிகரிக்கச் செய்து சமகாலத்திற்கிசைவான வாண்மையுள்ள கற்றல் சமூகத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கங்களில் முக்கியமானவையாகும்.

பாடசாலைகள், கோட்டங்கள், வலயங்கள் என கவின்நிலைப் போட்டிகளை நடத்தி பாடசாலைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறானதொரு செயற்பாட்டின் முன்னோடியாக கல்முனை கோட்டக் கல்வி அலுவலகம் நடத்திய கவின்நிலைப் போட்டியினைக் குறிப்பிடலாம்.

கல்முனை கோட்டத்திலுள்ள 17 பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை உள்ளடக்கிய 15 பாடசாலைகளில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. பாடசாலை மட்டத்தில் 3, 4 ஆம் தரங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையே மேற்படி கோட்ட மட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்களின் முறையான கலைத்திட்ட முகாமை, மாணவர்களின் மனவெழுச்சி, புத்தாக்க சிந்தனைகள், கற்றல்- கற்பித்தல் செயன்முறையில் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பிரயோகம், பெற்றோரின் தரவட்ட பங்களிப்பு, பொலித்தீன் அற்ற வகுப்பறை கழிவு முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாக தயாரிக்கப்பட்ட வகைமைப்பாடுகளை உள்ளடக்கியே போட்டிகள் நடத்தப்பட்டன

தரம் 3 இல் கல்முனை அஷ்-ஷூஹாறா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும், கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும், அல்-பஹ்ரியா மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

தரம் 4 இல் கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் அல்-மிஸ்பா மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும் மருமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மற்றும் கல்முனை அல்-அஷ்கர் வித்தியாலயம் ஆகியன மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளன.

பாடசாலை மட்டத்தில் தெரிவாகி, கோட்ட மட்டத்தில் பங்கேற்ற பாடசாலைகளுக்கிடையே முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பரிசளிப்பு நிகழ்வானது கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது. கோட்டக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பாடசாலைகளின் வேலைத்திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வெற்றியீட்டிய பாடசாலைகள் தவிர்ந்த போட்டிகளில் பங்குபற்றிய பாடசாலைகள் அனைத்திற்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபிர், பீ.ஜிஹானா ஆலிப் உட்பட கல்வித்துறை சார்ந்தோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

–ஜெஸ்மி எம்.மூஸா…

(பெரியநீலாவணை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT