வனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்! | தினகரன்

வனசீவராசிகள் மீதான கரிசனை மேம்படட்டும்!

எமது சூழலில் வாழ்கின்ற பிராணிகளில் ஒவ்வொன்றுமே தனித்தனியான வேறுபட்ட குணாம்சங்கள் கொண்டவை.

சில பிராணிகள் சாதுவானவை; மனிதனுடன் எப்போதுமே நேயமான போக்கைக் கடைப்பிடிக்க விரும்புபவை. அவற்றினால் மனிதனுக்கு தீங்கு விளைவதில்லை.

ஏனைய பிராணிகள் பலவற்றிடம் அவ்வாறான சுபாவம் கிடையாது; அவை மூர்க்கமான குணம் கொண்டவையாக இருக்கலாம்; மனிதனைப் பார்த்தவுடனேயே தாக்க வேண்டுமென்ற கொடிய சுபாவம் மிக்கவை அப்பிராணிகள். அவ்வாறான பிராணிகளை நாம் 'கொடியவை' என்கிறோம்.

அவ்வாறானால் சாதுவான பிராணிகளெல்லாம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும். கொடிய உயிரினங்களெல்லாம் கொன்று அழிக்கப்பட வேண்டுமென்றும் அர்த்தம் கொள்ளலாகாது.

அவ்வாறு நாம் கருதுவோமானால் அப்பாவிப் பிராணிகளை தனது தேவைகளுக்காக கொன்றொழிக்கின்ற மனிதனும் கொடியவனாகக் கருதப்பட வேண்டியவனாகி விடுவான். ஏனைய உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்ற ஒவ்வொரு சம்பவமுமே கொடிய செயல் என்றாகி விடும்.

பிராணிகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்வோமானால் அவற்றிடையே காணப்படுகின்ற கொடிய தன்மையும், சாதுவான சுபாவமும் இயற்கையாகப் படைக்கப்பட்டவையாகும். அக்குணாம்சங்கள் அப்பிராணிகளின் தவறல்ல. இயற்கைச் சூழலில் சவால்களைச் சமாளித்து வாழ்வதற்கான இசைவாக்கங்களாகவே அவற்றின் குணாம்சங்களும் அமைந்திருக்கின்றன.

நாம் காண்கின்ற பிராணிகள் அத்தனையுமே எமது சூழலின் அங்கங்கள் ஆகும். கொடிய நோய்களைப் பரப்புகின்ற, சூழல் பாதுகாப்புக்கு பெருந்தீங்கு தருவனவாக விளங்குகின்ற நுளம்பு போன்ற பூச்சியினங்கள் தவிர ஏனைய அத்தனை உயிரினங்களுமே எமது நண்பர்களாகக் கொள்ளப்பட வேண்டியவையாகும்.

உணவுச் சங்கிலியைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிராணியும் இணைப்புகளாக விளங்குகின்றன. ஒரு இனம் முற்றாக அழிக்கப்படுகின்ற போது உணவுச் சங்கிலியே துண்டிக்கப்பட்டுப் போகின்றது. அதன் பின்னர் எமது சூழலின் உயிர்ச்சாகியம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது. புவியின் மனிதனின் இருப்பும் ஆபத்துக்குள்ளாகி விடக் கூடும்.

இலங்கையில் இப்போது மனிதனுக்கும் யானைகளுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் மோதல் சாதாரணமான விவகாரமல்ல. மனிதர்களும் யானைகளும் கொல்லப்படும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு செல்வதனால், இப்பிரச்சினைக்கு எவ்வாறாயினும் தீர்வு கண்டுவிட வேண்டுமென்ற அவசியம் உருவாகியிருக்கிறது.

மனித உயிர்கள் எத்தனை பெறுமதி மிகுந்தவையோ அத்தனை பெறுமதி மிகுந்தவைதான் யானைகளின் உயிர்களும் என்ற அனுதாபக் கண்ணோட்டத்துடனேயே இப்பிரச்சினை அணுகப்பட வேண்டும்.

நாட்டின் அத்தனை யானைகளும் அழிந்து போய் விட்டால் இப்பிரச்சினைக்கே முற்றுப்புள்ளி ஏற்பட்டு விடுமென எவரேனும் கருதுவார்களாக இருந்தால், அதுபோன்ற முட்டாள்தனமான கருத்து வேறெதுவுமே கிடையாது. இயற்கைச் சூழலின் அங்கத்தினரை அழித்து விட்டால் அச்சாகியமே அழிந்தொழிந்து போய் விடும்.

இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய மிருகங்களுக்குள் யானைகள் பிரதானமானவை. இலங்கையின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கூறுகின்ற இலக்கிய மூலாதாரங்கள் பலவற்றில் யானைகள் மிகுந்த மதிப்புக்குரிய சின்னங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரு நாடுகளின் அரசுகள் தமக்கிடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் அடையாளமாக யானைகளைப் பரிமாறிக் கொண்டதாக வரலாறு கூறுகின்றது.

கி.பி. 1500 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையை ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஐரோப்பியர்கள் இங்கிருந்து கொண்டு சென்ற வியாபாரப் பொருட்களில் யானையும் அடங்குகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் இந்து, பௌத்த சமய வைபவங்களில் யானைகள் பங்குகொள்ளச் செய்யப்பட்டு வருகின்றன. கௌரவத்துக்குரிய மதச் சின்னங்களில் ஒன்றாக யானை மதிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான பெறுமதிமிக்க உயிரினம் இலங்கையில் இப்போது அழிவை எதிர்நோக்கியுள்ளதென்பது கவலை தருவதாகும். இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் கிராம மக்களால் சுமார் 1200 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவலொன்று கூறுகின்றது. அதேசமயம் இக்காலப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 375 ஆகும். இச்செய்தியும் பரிதாபத்துக்குரியது.

விவசாயச் செய்கையை துவம்சம் செய்வதாலும், குடிமனைகளுக்குள் வந்து மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாலும் யானைகள் இதுகாலவரை அழிவை எதிர்நோக்கி வந்தன. ஆனால் இன்று ரயில் போக்குவரத்து என்பது யானைகளுக்கு மிகுந்த உயிராபத்து நிறைந்ததாக மாறியிருக்கின்றது. ரயில் பாதைகளில் வைத்து ரயிலினால் மோதுண்டு யானைகள் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

ஹபறணைக்கு அப்பால் இரு தினங்களுக்கு முன்னர் ரயிலினால் மோதுண்டு நான்கு யானைகள் பலியானவை துயரம் நிறைந்ததொரு சம்பவம்.

எமது நாட்டின் இயற்கைச் செல்வங்களில் ஒன்றான யானைகள் இவ்வாறு அழிக்கப்படுவதைத் தவிர்க்க வனசீவராசிகள் அமைச்சும், போக்குவரத்து அமைச்சும் இணைந்து காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. வனசீவராசிகளின் பாதுகாப்பில் எமது நாட்டில் காண்பிக்கப்படும் கரிசனை உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும். இயற்கைச் செல்வங்கள் மீதான கரிசனை மேம்படுவது விலங்குகள் மீதான ஆர்வலர்களுக்கு உண்மையிலேயே நிம்மதி தருகிறது.


Add new comment

Or log in with...