மலையகத்தில் தனி ஈழம் கேட்கவில்லை. அங்குள்ள மக்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான உரிமையையே கோருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அதிகார சபையின் உருவாக்கத்தின் மூலமாக மலையக மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர்,தோட்ட சமுதாயத்தினருக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் இந்த அதிகார சபை கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பெண்கள், சிறுவர்கள் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தி அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கு இந்த அதிகாரசபை உறுதுணையாகவிருக்கும். மலையக மக்களுக்கு வீட்டுரிமையை வழங்கும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்த இந்த அதிகார சபை ஒத்துழைப்பு வழங்கும்.
அத்தோடு தோட்டத்துறையினுடைய இளைஞர்களுக்கு கல்வி முன்னேற்றத்துக்காக மூன்றாம்நிலை உயர்கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியை அதிகரிப்பதற்கு உதவிகளை வழங்கும்.
பெருந்தோட்ட சமுதாயத்தினரை சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் அரச கட்டமைப்புக்குள் சேர்ப்பதை உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தல் என்பன இந்த அதிகார சபையின் இரண்டு பிரதான நோக்கங்களாகும்.
மகேஸ்வரன் பிரசாத்
Add new comment