யெமனில் பட்டினி அச்சுறுத்தலில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள் | தினகரன்

யெமனில் பட்டினி அச்சுறுத்தலில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள்

யெமனில் மேலும் ஒரு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு எச்சரித்துள்ளது.

யெமனில் தொடரும் யுத்தம் காரணமாக அங்கு நாணயத்தின் பெறுமதி குறைந்து உணவு விலை அதிகரித்து வரும் நிலையில் மேலும் பல குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மைக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர் பகுதிக்கான பெரும்பாலான உதவிகள் வரும் பிரதான துறைமுக நகரான ஹுதைதாவை சூழ மோதல் இடம்பெற்று மற்றொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

யெமனில் தற்போது 5.2 மில்லியன் சிறுவர்கள் பஞ்சத்தை எதிர்கொண்டிருப்பதாக அந்த தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் மேற்கு பகுதியை கைப்பற்றி ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹாதி தப்பியோடியதை அடுத்து கடந்த 2015 தொடக்கம் யெமனில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் நீடித்து வருகிறது. ஹூத்திக்களின் பின்னணியில் ஷியா ஈரான் இருப்பதாக கூறப்படும் நிலையில் சுன்னி நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மேலும் ஏழு அரபு நாடுகள் மீண்டும் ஜனாதிபதி ஹாதி அரசை ஏற்படுத்தும் முயற்சியாக அந்த யுத்தத்தில் தலையிட்டுள்ளன.

இந்த யுத்தம் காரணமாக ஆசிரியர்கள், அரச தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதோடு மேலும் பலருக்கு கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. யுத்தத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை 68 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதே காலப்பிரில் யெமன் ரியாலின் மதிப்பு 180 வீதத்தால் சரிவு கண்டிருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மோதல்கள் காரணமாக ஹுதைதா துறைமுகம் தடைப்பட்டிருப்பது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் யெமன் நாட்டு நாணயத்தின் மதிப்பு அதன் வரலாற்றில் மிக குறைந்த நிலையை எட்டியது. இது அந்நாட்டின் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.

“தங்களுக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்று பல மில்லியன் குழந்தைகளுக்கு தெரியாத நிலை உள்ளது” என்று சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பின் தலைமை நிர்வாகியான ஹெல டார்னிங் ஸ்மிட் கூறினார்.

“வடக்கு யெமனில் நான் சென்ற ஒரு மருத்துவமனையில், குழந்தைகள் அழுவதற்குக்கூட வலுவில்லாமல் இருந்தனர்.

அவர்களது உடல் வலுவை பசி தின்றுவிட்டது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மெனில் தொடர்ந்து நடந்துவரும் மோதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 55 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது.


Add new comment

Or log in with...