பதற்ற சூழலை தணித்த புடின் மற்றும் நெதன்யாகு | தினகரன்

பதற்ற சூழலை தணித்த புடின் மற்றும் நெதன்யாகு

சிரியாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் சிரிய அரச படையால் ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட பதற்றத்தை ரஷ்யா மற்றும் இஸ்ரேலிய தலைவர்கள் தணித்துள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் அழைத்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமானத்தில் இருந்த 15 ரஷ்யர்களும் கொல்லப்பட்டதற்கு வருத்தத்தை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த சம்பவத்திற்கு அவர் மீண்டும் ஒரு முறை சிரியா மீதே குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவத்தை “சிக்கலான சூழலில் சங்கிலித்தொடராக இடம்பெற்ற ஒரு விபத்து” என்று புடின் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யாவின் ஐ.எல்.–20 விமானம் கடந்த திங்கட்கிழமை இரவு மத்தியதைக் கடலுக்கு மேலால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயற்பட்டு வருகிறது.

புடின் மற்றும் நெதன்யாகுவுக்கு இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றிருப்பதோடு இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி சமரசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தேவையான அனைத்து தகவல்களையும் தருவதாக நெதன்யாகு தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்ளும்படி நெதன்யாகுவிடம் குறிப்பிட்டிருக்கும் புட்டின், இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் சிரியாவின் இறைமையை மீறுவதாகவும் அவர் வலியுறுத்தியதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Add new comment

Or log in with...