ஏவுகணை தளத்தை மூட வட கொரியா இணக்கம் | தினகரன்

ஏவுகணை தளத்தை மூட வட கொரியா இணக்கம்

வட கொரியாவின் பிரதான ஏவுகணை சோதனை மற்றும் ஏவு தளம் ஒன்றை மூடுவதற்கு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜொங் உன் இணங்கியதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியா சென்றிருக்கு மூன் ஜே–இன், அணு ஆயுத ஒழிப்புக்கு இரு தலைவர்களிடமும் இணக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தில் இராணுவ ரீதியிலான அமைதியை ஏற்படுத்தும் வட கொரிய தலைவரின் மிகப்பெரிய பாய்ச்சலாக இருந்தது என்று மூன் குறிப்பிட்டுள்ளார்.

நெருங்கிய எதிர்காலத்தில் தென் கொரிய தலைநகர் சோலுக்கு விஜயம் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கிம் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அங்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் வட கொரிய தலைவராக அவர் இருப்பார்.

அணு ஆயுதக் களைவை பிரதான இலக்காகக் கொண்டே இரு கொரியாக்களுக்கும் இடையிலான இந்த உச்சிமாநாடு இடம்பெறுகிறது. இந்த அணு ஆயுதக் களைவு தொடர்பில் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலும் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணு ஆயுதக் களைவு தொடர்பில் வட கொரியா தனது கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

டெங்சங்–ரீ ஏவுகணை சோதனைத் தளம் மற்றும் ஏவு தளத்தை நிரந்தரமாக மூடுவதற்கே கிம் இணங்கியுள்ளார். இது ஒரு தீர்க்கமான முடிவாக பார்க்கப்படுவதோடு இங்கு தொடர்ந்து செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதை தொடர்புடைய நாடுகளின் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடந்த ஜுன் மாதம் சந்திப்பதற்கு முன்னர் வட கொரியா தனது பிரதான அணு ஆயுத சோதனை தளத்தை தகர்த்தது.

இந்நிலையில் இரு கொரியாக்களுக்கும் இடையில் ரயில் பாதை இணைப்புகள், சுகாதார ஒத்துழைப்புகள் மற்றும் யுத்தத்தால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க அனுமதிப்பது போன்ற உறவுகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தத்தில் இரு கொரியாக்களுக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தென் கொரிய தலைநகர் சோலுக்கு வரும்படி மூன் வட கொரிய தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2023 ஒலிம்பிக் போட்டிகளை இணைந்து நடத்துவதற்கும் இரு நாடுகளும் விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் தென் கொரிய ஜனாதிபதி வட கொரியாவுக்கு சென்றிருப்பது இதுவே முதல்முறை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தொடக்கம், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னோடு தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் நடத்தும் 3ஆவது சந்திப்பு இதுவாகும்.


Add new comment

Or log in with...