இந்தியாவிற்கு சாதகமான வகையில் அட்டவணை மாற்றியமைப்பு | தினகரன்

இந்தியாவிற்கு சாதகமான வகையில் அட்டவணை மாற்றியமைப்பு

இந்தியாவிற்கு சாதகமான வகையில் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் தலைவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளான துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க கால அட்டவணையில் இந்தியா சில போட்டிகளில் அபு தாபியில் விளையாடும் வகையில் இருந்தது.

அதன்பின் இந்தியாவின் அனைத்து போட்டிகளிலும் துபாயில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டடு. இது இந்தியாவிற்கு சாதகமானது என்று பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சர்பிராஸ் கூறுகையில் ‘‘போட்டி அட்டவணையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியா ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தோற்றாலும் கூட, தொடர்ந்து துபாயில் விளையாட முடியும். அபுதாபிக்கும் துபாயிக்கும் பயணம் செய்யும் பிரச்சினை உள்ளது. 90 நிமிடங்கள் பயணம் செய்து, பின்னர் விளையாட வேண்டும். அதன்பின் ஒருநாள் இடைவெளியில் அடுத்த போட்டியில் களம் இறங்க வேண்டும்.

இது அனைத்து அணிகளுக்கும் ஒரே மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏன் இதுபோன்று நினைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பிரச்சினையை பாகிஸ்தான் கிரிக்கட் சபை கையில் எடுக்க வேண்டும்’’ என்றார்.


Add new comment

Or log in with...