மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் நேற்று கைது | தினகரன்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் நேற்று கைது

அரச முதலீட்டு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற பல மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நீதிமன்றத்தில் மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நஜீப், மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நஜீப் மீது ஏற்கனவே பண மோசடி, ஊழல் மற்றும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதோடு, அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

மலேசிய அரசுக்கு சொந்தமான 1எம்.டி.பி நிதி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியது தொடர்பாகவே நஜீப் மீது குற்றச்சாட்டு உள்ளது. நஜீப்பின் கூட்டாளிகள் பல பில்லியன்களை களவாடி இருப்பதாக சர்வதேச விசாரணைகள் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே நஜீப் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 1எம்.டி.பி நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார். எனினும் இந்த நிதி நிறுவனம் பல பில்லியன் ரிங்கில் கடன்களை குவித்ததாக கூறப்பட்டதோடு, இதன் நிதி மோசடி குறித்து அமெரிக்கா மற்றும் மேலும் பல நாடுகளும் விசாரணைகளை நடத்தின.

இந்த ஊழல் விவகாரத்தை அடுத்து கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ் நஜீப்பின் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அதிகாரத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் இந்த ஊழல் விவகாரம் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.


Add new comment

Or log in with...