Home » காசா போர் நிறுத்தத்தை நீடிக்க தீவிர பேச்சு: சில நாட்கள் தொடர வாய்ப்பு

காசா போர் நிறுத்தத்தை நீடிக்க தீவிர பேச்சு: சில நாட்கள் தொடர வாய்ப்பு

by sachintha
November 30, 2023 8:15 pm 0 comment

ஆண் பணயக்கைதிகளை விடுப்பதற்கு ஹமாஸ் கடும் நிபந்தனை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்றுடன் (29) நிறைவடைந்த நிலையில் அதனை மேலும் நீடிப்பதற்கு சர்வதேச பேச்சுவார்த்தையாளர்கள் முயன்று வருகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினால் நாளுக்கு குறைந்தது 10 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் பட்சத்தில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து நீடிக்க முடியும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது. எனினும் பலஸ்தீன போராளிகளின் பிடியில் தற்போது குறைந்த எண்ணிக்கையான பெண்கள் மற்றும் சிறுவர்களே இருக்கும் நிலையில் முதல்முறை ஆண் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலேயே பேச்சுவார்த்தையை முன்னேடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் ஆரம்பமானது தொடக்கம் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 90 க்கும் அதிகமான இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலஸ்தீன போராளிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பகரமான 200க்கும் அதிகமான பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் தொடர்ந்து 150க்கும் அதிகமான பணயக் கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தற்போதைய ஏற்பாட்டின்படி நாளுக்கு 10 பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்தத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்க போதுமானதாகும். எனினும் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய படை வீரர்கள் மற்றும் ஆண்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் அமைப்பு கடுமையான பேரப்பேச்சில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. இதில் உயிரிழப்புகள் கொண்ட தாக்குதல்களை நடத்திய பலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தத்தை நீடிப்பது மற்றும் மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேசுவதற்கு அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏயின் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் மற்றும் இஸ்ரேலிய மொசாட் உளவு நிறுவனத் தலைவர் டேவிட் பேர்னீ ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (28) கட்டார் சென்றிருந்தனர். இவர்கள் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸீம் அல் தானியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உத்தேச அடுத்தக்கட்ட உடன்பாட்டுக்கான வழிகளை அவர்கள் ஆராய்ந்தனர். இருப்பினும் அது குறித்து என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை.

ஹமாஸ் அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் கட்டார், இந்தப் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற முயற்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எகிப்து மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை போர் நிறுத்தத்தை மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிப்பது தொடர்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேச்சுவார்த்தைகளில் இருந்து கசிந்துள்ள தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் இஸ்ரேலிய இராணுவத்தில் மேலதிக வீரராக செயல்பட முடியாத வயதானவர்கள், பெண் வீராங்கனைகள், மேலதிக இராணுவ வீரர்கள் மற்றும் பணயக்கைதிகள் பிடிக்கப்படும் முன்னர் அல்லது பிடிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் சடலங்களை திரும்ப வழங்குவது ஆகிய அடிப்படைகளில் ஐந்து பிரிவுகளில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் இஸ்ரேலுடனான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் நான்கு நாட்களுக்கு நீடிப்பதற்கு ஹமாஸ் விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

“நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் விருப்பத்தை வெளியிட்டிருப்பதோடு தற்போதுள்ள உடன்படிக்கையின் விதிகளுக்கு அமைய இந்தக் காலப்பகுதியில் ஏனைய போராட்டக் குழுக்கள் மற்றும் மற்றத் தரப்புகளின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் அமைப்பினால் முடியுமாக உள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேலிய அரசை கட்டுப்படுத்தி வரும் வலதுசாரிகளிடம் அழுத்தம் அதிகரித்து வருகிறது. போர் நிறுத்தம் காலவரையறையின்றி நீடிக்கப்படக்கூடாது என்று அவர்கள் கூறி வருகின்றனர். போர் நிறுத்தத்திற்குப் பின் போரை ஆரம்பிப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டதை அடுத்தே போர் வெடித்தது. அது தொடக்கம் கடந்த ஒன்றரை மாதங்களாக காசாவில் இஸ்ரேல் இடைவிடாது வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக நடத்திய தாக்குதல்களில் 15,000க்கும் அதிகமானர்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து 77 இஸ்ரேலிய துருப்புகள் அங்கு கொல்லப்பட்டன.

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவின் பெரும் பகுதி அழிவடைந்திருப்பதோடு அந்தப் பகுதியின் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக வடக்கு காசாவில் உள்ள மருந்துவமனைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன.

இந்நிலையில் குண்டு வீச்சுகளை விடவும் நோய்களால் விரைவில் அதிகமான காசா மக்கள் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அங்குள்ள பெரும்பாலானவர்கள் மருந்துகள், தடுப்பூசிகள், பாதுகாப்பான நீர் மற்றும் சுற்றாடல் தூய்மை மற்றும் உணவு இன்றி இருக்கின்றனர் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமது வீடுகளை இழந்திருப்பதோடு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தம்மால் சுமக்க முடியான உடைமைகளுடன் தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். அங்கு உணவு, சுத்தமான நீர் மற்றும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

“நாம் பெரும் மனிதாபிமான நிலையை சந்தித்து வருகிறோம். அதேநேரம், அனைத்த பணயக்கைதிகளும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனையின்றி உடன் இடம்பெற வேண்டும் என்று நாம் நம்புகிறோம். ஆனால் தற்போது காசாவில் மனிதாபிமான போர்நிறுத்தம் ஒன்று தேவையாக உள்ளது” என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம் சுமார் 800 உதவி லொறிகள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன. காசாவுக்கான மனிதாபிமான விநியோகங்களை ஏற்றிய அமெரிக்காவின் மூன்று விமானங்களில் முதல் விமானம் நேற்று முன்தினம் (28) எகிப்தில் தரையிறங்கியது.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு ஷலோம் எல்லை கடவையை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐ.நா உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிப்பித் ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு நேற்று பயணித்தார்.

இஸ்ரேல், காசா மற்றும் எகிப்து சந்திப்பில் அமைந்திருக்கும் கெரெம் ஷலொம் எல்லைக் கடவை தற்போதைய மோதல் வெடிப்பதற்கு முன்னர் காசாவுக்கான 60 வீதமான உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

தற்போது காசாவுக்கான உதவிகள் எகிப்து எல்லைக் கடவையான ரபா வழியாகவே செல்கின்றன. எனினும் இது டிரக் வண்டிகள் செல்வதற்கு அன்றி பாதசாரிகள் கடப்பதற்கான எல்லையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT