அனுமதியின்றி குடியேறிய 45 குடும்பங்கள் வெளியேற்றம் | தினகரன்

அனுமதியின்றி குடியேறிய 45 குடும்பங்கள் வெளியேற்றம்

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் சம்பவம்

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு பராமரிப்பின்றிக் காணப்பட்ட காணிக்குள் அனுமதியின்றி குடியேறிய 45 குடும்பங்களை நேற்று சிவில் பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். அவர்களின் கொட்டில்களை உடைத்ததோடு மக்கள் மீதும் தாக்குதல் நடத்த முயன்றதாலும் இரு தரப்புக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால், இப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் ஏற்கனவே மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டகாணிகளில் சுமார் 145 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் நீண்டகாலமாக பராமரிப்பின்றிக் காணப்பட்டன.

இந் நிலையில் 1983ஆம்ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவான குடும்பங்கள் இந்தக் காணிகளில் குடியிருந்தன.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய நிலையில் இக் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்தது. இந் நிலையில் இக்காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.

இப் பிரதேசத்தில் காணிகள் இன்றிக் காணப்படுகின்ற 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப் பராமரிப்பின்றிக் காணப்பட்ட மத்திய வகுப்புத் திட்டக்காணிகளில் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியிருந்தனர்.

நேற்று (19) இக் காணிக்குள் சென்ற சிவில் பாதுகாப்பு படையினரும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களின் கொட்டில்களை பிடுங்கி எறிந்துள்ளதுடன், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் வீட்டுப்பாவனைப்பொருட்களும் சிவில் பாதுகாப்பு படையினர் எடுத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் குறூப், கிளிநொச்சி குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...