ஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம் | தினகரன்

ஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம்

தமிழிசையிடம் கேள்வி கேட்ட முச்சக்கர வண்டி சாரதி தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி வீட்டுக்கு நேரில் சென்று தமிழிசை இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம் அளித்தார்.

கடந்த 16-ம் திகதி சைதாப்பேட்டையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவர் தமிழிசையிடம், "அக்கா ஒரு நிமிஷம் பெற்றோல் விலை தினமும் உயருகிறது என்று கேள்வி எழுப்பிய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் வட்ஸ் அப், வலைதளங்களில் வைரலானது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு கேள்வி கேட்டால் தாக்குவார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழிசையை கடுமையாக விமர்சித்தனர். முச்சக்கர வண்டி சாரதி சங்கம் இதுகுறித்து புகார் அளித்தது. இந்நிலையில் பாஜகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி கதிரின் வீட்டுக்கு தமிழிசை பாஜக நிர்வாகிகளுடன் சென்றார்.

தமிழிசை தான் கொண்டுவந்த கவரிலிருந்த இனிப்பைப் பிரித்து முச்சக்கர வண்டி சாரதி கதிரின் மனைவி , மகள்களை அழைத்து வழங்கினார்.

தான் தவறாக எதையும் கூறவில்லை என்று அப்போது கதிர் தெரிவித்தார்.

வாஜ்பாய் காலத்தில் நமக்காக தேர்தல் வேலை பார்த்தவர் இவர் என கட்சி நிர்வாகி கதிரைப் பற்றி தமிழிசையிடம் தெரிவித்தார். தமிழிசையும் தனது செயலுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்தார். நான் அன்று உங்கள் கேள்விக்கு சிரிக்கவில்லை. அதே கேள்வியைக் கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தேன். மற்றபடி எனக்கு எந்த நோக்கமும் இல்லை, அன்று மழைவேறு அதிகம் இருந்ததால் நாங்கள் உடனே சென்றுவிட்டோம் என்று கூறினார். பரவாயில்லை என கதிர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...