இடைத்தரகர் மைக்கேலை இந்தியா அனுப்ப துபாய் நீதிமன்றம் அனுமதி | தினகரன்

இடைத்தரகர் மைக்கேலை இந்தியா அனுப்ப துபாய் நீதிமன்றம் அனுமதி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகொப்டர் ஒப்பந்த பேர ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவரை விரைவில் இந்தியா அழைத்து வந்து சிபிஐ விசாரணை நடத்தும் என தெரிகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

3,600 கோடி ரூபா பெறுமதியான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் 450 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிமன்றம் மைக்கேலை வழக்கு விசாரணைக்காக துபாயில் இருந்து நாடுகடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்படுகிறார். இதனால் பல ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.


Add new comment

Or log in with...