வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் | தினகரன்

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

நாட்டில் மூன்று தசாப்த காலம் நீடித்த உள்நாட்டு யுத்தம் முடிவுற்று சுமார் ஒரு தசாப்த காலத்தை அண்மித்துள்ளது. இவ்வாறான சூழலில் ஏற்கனவே உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்வாறான காரணிகள், சம்பவங்கள் வழிவகுத்தனவோ அவ்வாறான சம்பவங்களும், காரணிகளும் யுத்தம் முடிவுற்ற பின்னரான அண்மைக் காலத்தில் இடம்பெறவே செய்கின்றன.

அவ்வாறான சம்பவங்களில் தற்போது பிரதான இடத்தைப் பிடித்திருப்பது வடக்கு, கிழக்கு கடற்பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதோடு இந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கடற்றொழில் முறைமைகளைப் பயன்படுத்தி அத்தொழிலில் ஈடுபடுவதுமாகும்.

மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் காரணமாக வடக்கு,கிழக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். யுத்தத்துக்கு முன்னர் இலங்கையின் கடலுணவு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வடக்கு, கிழக்கு கடற்றொழிலே நல்கியது. யுத்தம் காரணமாக இப்பங்களிப்பு ஒற்றை இலக்கத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

யுத்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு அவர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டனர். உள்நாட்டு யுத்தம் 2009இல் முடிவுற்றதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்கள் மத்தியில் உருவாகின. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் யுத்தத்திற்கு பின்னரும் கையாண்ட தவறான கொள்கைகளால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலைமையே நீடித்தது.

இவ்வாறான சூழலில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினூடாக பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் கடந்த ஆட்சியாளர்கள் வடக்கு, கிழக்கு கடற்றொழில் துறை தொடர்பில் கையாண்ட கொள்கையைத் தளர்த்தி சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட இடமளித்தது. இதன் விளைவாக வடக்கு மீனவர்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடத் தொடங்கினர். இதேசூழலில் தென்னிந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.

இவை இவ்வாறிருக்க, தென்னிலங்கை மீனவர்கள் வட பகுதி கடலில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதும், தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. இதற்கு வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் அவ்வப்போது மீனவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற முறுகல்கள் சுட்டிக்காட்டத்தக்கதாக அமைந்துள்ளன.

தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்கும் டைனமைட்,சுருக்குவலை போன்ற தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துவதற்கும் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அவ்வப்போது ஜனநாயக ரீதியில் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏனெனில் இலங்கையில் கடற்றொழிலானது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீன் அறுவடை இடம்பெறும் காலப் பகுதியில் தென்பகுதியில் மீன் அறுவடை மிகவும் குறைவாகவே காணப்படும். அந்த வகையில் தற்போது வடபகுதியில் மீன் அறுவடை காலமாக விளங்குவதால் தென்பகுதி கடற்றொழிலாளர்கள் வடபகுதி நோக்கி கடற்றொழிலுக்காகச் செல்கின்றனர்.

ஆனால், தென்பகுதியில் மீன் அறுவடைக் காலத்தில் வடபகுதி மீனவர்கள் தென்பகுதிக்கு அவ்வாறு வருகை தருவதுமில்லை. அவர்கள் தென்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படுவதுமில்லை. இதன்படி தென்பகுதி மீனவர்களின் அண்மைக் கால செயற்பாடு நியாயமற்றதும் ஏற்றுக் கொள்ள முடியாதவையுமாகும். இதற்கு வடபகுதி மீனவர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்து வருகின்ற போதிலும், தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இவ்வாறான நிலையில் மயிலிட்டி கடற்றொழில் துறைமுக நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜத்தமுனி சொய்சாவுடன் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் நடத்திய சந்திப்பின் போது, வட பகுதி கடலில் கடலட்டை பிடிப்பதையும் சட்டவிரோத முறைமைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதையும் முற்றாக தடை செய்வதாகக் குறிப்பிட்டார்.

அதனை மீறி நேற்றுமுன்தினம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்ட எட்டு தென்பகுதி கடற்றொழிலாளர்களை அப்பிரதேச மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டதோடு யாழ்குடா நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸாரும் ஸ்தலத்திற்கு சென்றனர். அத்தோடு மாவட்ட கடற்தொழில் திணைக்களப் பணிப்பாளரும் அங்கு வருகை தந்தார். தென்பகுதி கடற்றொழிலாளர்கள் வடபகுதி கடலில் கடற்றொழிலில் ஈடுபட மத்திய அமைச்சின் பணிப்பாளரே அனுமதி வழங்கியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தென்பகுதி மீனவர்களை சிறைப்பிடித்த கடற்றொழிலாளருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு பரபரப்பு நிலை உருவானது. இந்தச் சூழலில் தென்பகுதி மீனவர்களை பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர்.

வடபகுதி கடற்றொழிலாளர்கள் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதுதான் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். ஆகவே அவர்களது தொழிலிலுக்கு சவாலாக அமைவதும் இடையூறுகளை ஏற்படுத்துவதும் நியாயமற்ற செயலாகும். அவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கம் முன்னெடுக்கின்ற சகவாழ்வு மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களில் தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியும். அதனால் தென்பகுதி கடற்றொழிலாளர்கள் வடபகுதி கடலில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதையும் சட்டவிரோத மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். அது நல்லிணக்க மற்றும் சகவாழ்வு வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்த பக்கபலமாக அமையும்.


Add new comment

Or log in with...