சீனாவின் மேலும் 200 பில். டொலர் பொருட்களுக்கு அமெ. கூடுதல் வரி | தினகரன்

சீனாவின் மேலும் 200 பில். டொலர் பொருட்களுக்கு அமெ. கூடுதல் வரி

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களில், 200 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்து இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்து வரும் வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது.

கைப்பைகள், அரிசி, துணிகள் போன்றவை கூடுதல் வரிவிதிப்புக்கு இலக்காகியுள்ளன. ஆனால், கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகும் என்று நம்பப்பட்ட, ஸ்மார்ட் வொட்ச் போன்ற சில பொருள்கள் அதில் இருந்து தப்பியுள்ளன.

அதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் பண்ணையாளர்கள், தொழில்துறைகள் மீது சீனா நடவடிக்கை எடுத்தால், எஞ்சியுள்ள 267 பில்லியன் டொலர் மதிப்புள்ள இறக்குமதிப் பொருட்கள் மீது உடனடியாகக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அது நிறைவேற்றப்பட்டால், ஐபோன் முதலிய மற்ற திறன்பேசிகள் மீதும் வரி விதிக்கப்படும் என நம்பப்படுகிறது.

அமெரிக்கா மேற்கொண்டு இது போன்ற வரிவிதிப்பில் ஈடுபட்டால் தாமும் பதில் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சீனா முன்னதாக கூறியிருந்தது.

இந்த புதிய வரிவிதிப்பு செப்டம்பர் 24 முதல் அமுலுக்கு வரும். தற்போது இது 10 வீதம் என்ற அளவில் இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏதும் எட்டப்படாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது 25 வீதமாகும்.

“மானியங்கள் அளிப்பது, சில குறிப்பிட்ட துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளுர் கூட்டாளிகளோடு மட்டுமே செயல்பட முடியும் என்ற விதி போன்ற முறையற்ற வணிக நடைமுறைகளில் சீனா ஈடுபடுவதற்கு” பதிலடியாகவே இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை சீனப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா.

கடந்த ஜூலை மாதம் 3400 கோடி டொலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது வரிகளை அதிகரித்த அமெரிக்கா, மீண்டும் கடந்த மாதம் 1,600 கோடி டொலர் மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது 25 வீதம் வரி விதித்தது.

கடந்த சுற்றுகளைப் போலல்லாமல் தற்போதைய சுற்று வரிவிதிப்புக்கு உள்ளான பொருட்களின் மதிப்பு பல மடங்கு அதிகம். அதுமட்டுமல்லாமல் தற்போதுதான் பைகள், அறைகலன்கள் போன்ற நுகர்வுப் பொருட்கள் வரிவிதிப்புக்கு இலக்காகியுள்ளன.

இதனால், விலை உயர்வின் வலியை அமெரிக்கக் குடும்பங்கள் உணரத் தொடங்கும். இந்த நடவடிக்கையால் தங்கள் செலவு கூடும் என்றும், வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூறியுள்ளன.

இதுவரை, 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீன இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது.

அமெரிக்க – சீன வர்த்தகப் பூசல் தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை இடம்பெற்றாலும், அதனால் பலன் ஏற்படவில்லை.

நியாயமற்ற முறையில் இடம்பெறும் வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்தவே வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி வருகிறது.


Add new comment

Or log in with...