தென் கொரிய ஜனாதிபதி வட கொரியாவுக்கு விஜயம் | தினகரன்

தென் கொரிய ஜனாதிபதி வட கொரியாவுக்கு விஜயம்

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்காக இரு கொரிய தலைவர்களும் வட கொரிய தலைநகரில் சந்தித்துள்ளனர்.

வட கொரியா இந்த ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் மற்றும் அவரது மனைவி மூன்று நாள் விஜயமான நேற்றுக் காலை வட கொரிய தலைநகர் பியொங்யானை வந்தடைந்தனர். இவர்களுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் அவரது மனைவி அமோக வரவேற்பு அளித்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் தென் கொரிய ஜனாதிபதி வட கொரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தொடக்கம், வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னோடு தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் நடத்தும் 3ஆவது சந்திப்பு இதுவாகும்.

1953ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தோடு கொரிய போர் முடிவுக்கு வந்தாலும், எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

இரு நாட்டு தலைவர்களும், அணு ஒழிப்புக்கான நடைமுறை செயல்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விபரங்கள் தெரியவில்லை.

இதில் இரு கொரியாக்களுக்கும் இடையில் மேலதிக ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் அணு ஒழிப்பு பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கு இடையில் மத்தியஸ்தராக செயல்படும் நோக்கங்களை தென் கொரியா வெளிப்படுத்தி வருகிறது.


Add new comment

Or log in with...