சிரியாவில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் | தினகரன்

சிரியாவில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்

சிரியாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலின் போது ரஷ்ய இராணுவ விமானம் ஒன்றை சிரியா தவறுதலாக சுட்டுவீழ்த்தியுள்ளது. விமானத்தில் இருந்த 15 பேரும் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு ரஷ்யா இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளது.

சிரிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யாவை அறிவுறுத்தாத நிலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் ரஷ்ய விமானத்தை சிரிய வான் பாதுகாப்பு அமைப்புக்குள் சிக்கவைத்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த ரஷ்ய விமானம் கடந்த திங்கட்கிழமை இரவு ராடார் திரையில் இருந்து மறைந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக் குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

சிரியா மீதான வான் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் மிக அரிதாகவே தகவல் அளிக்கின்றபோதும், சிரியாவில் 18 மாதங்களில் 200க்கும் அதிகமான ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ அதிகாரி ஒருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய இராணுவ விமானம் சிரியாவின் லடகியா மாகாணத்தில் இருக்கும் ரஷ்ய விமானத்தளத்திற்கு திரும்பும் வழியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேலின் நான்கு எப்-16 ஜெட்கள் லடகியா மாகாணத்தின் சிரிய நிலைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோதே ரஷ்ய விமானம் காணாமல்போனதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய விமானம் சிரியாவால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நேற்று குறிப்பிட்டது. எனினும் இஸ்ரேலின் பொறுப்பற்ற செயலே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்ய விமானத்திற்கு என்ன நடந்தது என்ற சரியான தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

விமானத்தின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.


Add new comment

Or log in with...