சிரியாவின் இத்லிப்பில் இடை வலயம் அமைக்க ரஷ்யா –துருக்கி இணக்கம் | தினகரன்

சிரியாவின் இத்லிப்பில் இடை வலயம் அமைக்க ரஷ்யா –துருக்கி இணக்கம்

போர் சூழல் அதிகரித்திருக்கும் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் நிலைகொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையை பிரிக்கும் இடை வலயம் ஒன்றை ஏற்படுத்த துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

15 கிலோமீற்றர் தொடக்கம் 25 கிலோமீற்றர் பரந்த இந்த வலயம் ஒக்டோபர் 15 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி குறிப்பிட்டுள்ளார்.

துருக்கிக்கு ஆதரவான ரஷ்ய துருப்புகள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான துருக்கி படைகள் இந்த இடை வலயத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளன.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப்பை மீட்க இராணுவம் படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தால் மனிதாபிமான பேரழிவு ஒன்று ஏற்படும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சொச்சியில் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் இவ்வாறான ஒரு படை நடவடிக்கையை தவிர்ப்பதற்கு இணங்கியுள்ளனர்.

இந்த உடன்படிக்கையின் கீழ் டாங்கி, ரொக்கெட் லோஞ்சர்் மற்றும் மோட்டார் லோஞ்சர் உட்பட அனைத்து கனரக ஆயுதங்களையும் கிளர்ச்சியாளர்கள் ஒக்டோபர் 10 ஆம் திகதி இடை வலயத்தில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த இடை வலயம் இத்லிப் மாகாணத்திற்கு உட்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

“இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் மனிதாபிமான பேரவலம் ஒன்றை நாம் தடுப்போம்” என்று எர்துவான் தெரிவித்தார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை வீழ்த்த கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வரும் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாகவே இத்லிப் உள்ளது.

இத்லிப் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு மில்லியன் சிறுவர்கள் உட்பட 2.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.


Add new comment

Or log in with...