அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியன் | தினகரன்

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியன்

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக் மற்றும் இலவென் ஏசி விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து நடாத்திய தலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணம் 2018 மின்னொளி மெகா சுற்றுப்போட்டித் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது.

அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஏ.எல். தவம் தலைமையில் முதல்வர் தவம் விளையாட்டு மைதானத்தில் கடந்த (16) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விறுதிப்போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி ஹரீஸ் கலந்து சிறப்பித்தார்.

அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தினருக்கும் அக்கரைப்பற்று சூசிட்டி விளையாட்டுக் கழகத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இவ் இறுதிப் போட்டியின் முதல் பாதியில் சூசிட்டி விளையாட்டுக் கழகம் ஒரு கோலை புகுத்தி முன்னிலையில் திகழ்ந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது இறுதி நேரத்தில் சோபர் விளையாட்டுக் கழகம் தண்டனை உதை மூலம் ஒரு கோலை அடித்து போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து இப்போட்டித் தொடரின் வெற்றிபெற்ற அணியை தெரிவு செய்வதற்காக வழங்கப்பட்ட தண்டனை உதை முறையில் 6:5 என்ற கோல் கணக்கில் சோபர் அணி வெற்றிபெற்றது.

அட்டாளைச்சேனை விசேட நிருபர் 

 


Add new comment

Or log in with...