ஆசியக்கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம் | தினகரன்

ஆசியக்கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

ஆப்கான் அணியின் இந்த வெற்றியுடன், அவர்கள் இலங்கை அணிக்கெதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் முதல் வெற்றியினை பதிவு செய்திருப்பதுடன், குழு பி அணிகளிலிருந்து ஆசியக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு (சுபர் – 4) தெரிவாகும் அணியாகவும் பங்களாதேஷுடன் இணைந்துள்ளது.

ஆப்கானுடனான கிரிக்கெட் போட்டியொன்றில் முதற்தடவையாக அதிர்ச்சியான முறையில் தோல்வியடைந்திருக்கும் இலங்கை அணி தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவி ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறுகின்ற முதல் அணியாக மாறுகின்றது.

குழு பி அணிகளின் இரண்டாவது லீக் ஆட்டமாக அமைந்த இப் போட்டியின் நாணய சுழற்சியில் முன்னதாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் 137 ஓட்டங்களால் தோல்வியினை சந்தித்த இலங்கை அணி, ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தான் அணியுடனான இப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது.

அந்தவகையில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் விளையாடிய அமில அபொன்சோ, தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால் ஆகியோருக்கு பதிலாக இலங்கை செஹான் ஜயசூரிய, துஷ்மந்த சமீர, அகில தனன்ஞய ஆகியோரினை மீண்டும் அணிக்கு இணைத்திருந்தது. ஆசியக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணியினர் நல்லதொரு முடிவை எதிர்பார்த்த வண்ணம் துடுப்பாட தயராகியிருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாட தொடங்கிய ஆப்கான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மொஹமட் செஹ்சாத் மற்றும் இஹ்சானுல்லாஹ் ஜனாட் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை வழங்கினர்.

இரண்டு வீரர்களும் ஆரம்ப விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில், அகில தனன்ஞயவினால் இலங்கை அணிக்காக முதல் விக்கெட் கைப்பற்றப்பட்டது.

எல்பிடபிள்யு முறையில் அகிலவின் விக்கெட்டான மொஹமட் செஹ்சாத் 47 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை குவித்தவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

முதல் விக்கெட் பறிபோன போதிலும், களத்தில் இருந்த இஹ்சானுல்லாஹ், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த றஹ்மத் சாஹ் ஆகியோர் ஆப்கான் அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில், இஹ்சானுல்லாஹ் 45 ஓட்டங்களை பெற்ற வேளையில், றஹ்மத் சாஹ் தன்னுடைய 12 ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 72 ஓட்டங்களை எடுத்து தனது தரப்பிற்கு பெறுமதி சேர்த்தார்.

பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய ஆப்கான் அணி ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் ஆடிய ஹஸ்மதுல்லாஹ் சஹிதி, 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து குறிப்பிடும் படியான ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக இறுதி நேரத்தில் அசத்திய திசர பெரேரா 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், அகில தனன்ஞய 2 விக்கெட்டுக்களையும், லசித் மாலிங்க, துஷ்மந்த சமீர மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 250 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, முதல் ஓவரிலேயே ஆரம்ப வீரராக வந்த குசல் மெண்டிஸின் விக்கெட்டினை பறிகொடுத்து தடுமாற்றமான தொடக்கத்தை காட்டியது. 17 வயதேயான முஜிபுர் ரஹ்மானின் சுழல் பந்தை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் LBW முறையில் ஆட்டமிழந்து பங்களாதேஷ் அணியுடனான போட்டி போன்று இம்முறையும் ஓட்டமேதுமின்றி நடந்தார்.

எனினும் களத்தில் இருந்த உபுல் தரங்க புதிதாக களம் வந்த தனன்ஞய டி சில்வாவுடன் இணைந்து பொறுமையான முறையில் ஒரு இணைப்பாட்டத்திற்கு அடித்தளம் போட்டார். 54 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் தேவையற்ற ரன் அவுட் ஒன்றின் மூலம் தனன்ஞய டி சில்வா ஆட்டமிழக்க முடிவுக்கு வந்தது. ஆட்டமிழக்கும் போது தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் பின்னர் களம் வந்த குசல் பெரேராவின் விக்கெட் ரஷீத் கானின் சுழலில் வீழ்ந்தது. அவர் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டியிருந்தார். தொடர்ந்து, உபுல் தரங்கவின் விக்கெட்டும் 36 ஓட்டங்களுடன் சரிந்தது.

தரங்கவினை அடுத்து ஷெஹான் ஜயசூரிய மீண்டும் ஒரு தேவையற்ற ஓட்டம் ஒன்றுக்காக முயற்சித்த வேளையில், ரன் அவுட் செய்யப்பட்டு 14 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். இதனால், ஒரு கட்டத்தில் 108 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி மோசமான நிலைக்கு ஆளானது.

ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் நல்ல இணைப்பாட்டம் ஒன்றிற்காக முதல் முயற்சியினை சிறப்பாக செய்த வேளையில் லொங் ஒன் திசையில் பிடியெடுப்பு ஒன்றினை கொடுத்து அஞ்சலோ மெத் திவ்ஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மெத்திவ்ஸின் விக்கெட்டோடு இலங்கை அணியின் அஸ்தமனம் துவங்கியது.

இதன்படி இலங்கை அணியின் இறுதி எதிர்பார்ப்பாக இருந்த தசுன் சானக்க, திசர பெரேரா ஆகியோரும் நம்பிக்கை தராது ஓய்வறை நடந்த நிலையில், இலங்கை அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் திசர பெரேரா 28 ஓட்டங்களை குவித்திருக்க ஆப்கான் அணியின் பந்துவீச்சு சார்பாக முஜிபுர் ரஹ்மான், குல்பதீன் நயீப், ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டத்தில் சிறப்பித்த றஹ்மத் சாஹ்விற்கு வழங்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ஆப்கான் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணி யினை வரும் 20 ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை அணி இங்கிலாந்து அணியுடன் அடுத்த மாதம் டெஸ்ட், ஒரு நாள், ரி20 போட்டிகள் அடங்கிய தொடரில் ஆடவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணியின் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கிண்ணத்தில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

 


Add new comment

Or log in with...