துறைமுகம் வந்ததும் துன்பமும் சேர்ந்தது! | தினகரன்

துறைமுகம் வந்ததும் துன்பமும் சேர்ந்தது!

அன்றாட வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒலுவில் பிரதேச மீனவர்கள்

இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமானது மீன்பிடித்துறை ஆகும்.கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் பெரும்பான்மையானோர் கடல் மீன்பிடியையே தமது வாழ்வாதார தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் கிராமத்தில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் காலம்காலமாக கடற்றொழிலையே முக்கிய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக கடற்றொழிலும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஒலுவிலில் மீனவர்களின் நன்மை கருதியும், இப்பிரதேசத்திலுள்ள மக்களின் தொழில்வாய்ப்பு கருதியும் மீன்பிடித்துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க தீர்மானித்திருந்தார்.

நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் இந்த மீன்பிடித்துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. அன்றைய நாள் முதல் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமல்ல அதனை அண்டியுள்ள பாலமுனை,அட்டாளைச்சேனை , நிந்தவூர் , காரைதீவு , சாய்ந்தமருது , கல்முனை பிரதேச மீனவர்களும் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதில் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.

உள்ளூர் வாசிகளினதும் உல்லாசப் பிரயாணிகளினதும் பொழுதுபோக்கிற்கான மனதைக் கவர்ந்த ஒலுவில் பிரதேசம் இன்று கற்பாறைகள் நிரப்பப்பட்டு கடல் அரிப்புக்குள்ளாகி சோபை இழந்த இடமாக காட்சி தருகின்றது. இங்கிருந்த அழகிய தென்னந்தோப்புகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த வெளிச்சக் கோபுரம் கடலில் மூழ்கும் தறுவாயில் இருந்து பலத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் சுற்றிவர பாறாங்கற்கள் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை சேகரிப்பதற்காக அரசியல்வாதிகளுக்கு மீனவர் சமூகம் ஞாபகத்திற்கு வருவதுண்டு. அம்மீனவ சமூகம் தேர்தல் முடிந்த கையோடு மறந்து விடப்படுவது சாதாரணமான ஒரு நிகழ்வாகவே இருந்து வருகின்றது.

இம்மீனவர்களுக்கு தமது தோணியையும் ஏனைய மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாத்து வைப்பதற்கும், பழுதடைந்த மீன்பிடி வலைகளை பழுதுபார்ப்பதற்கும் நிரந்தரமான ஒரு இடம் இல்லாமல் இருப்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்!

ஒலுவில் பிரதேச மீனவரான ஏ.ஆதம்லெவ்வை கருத்துத் தெரிவிக்கையில்,

"ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் இந்தப் பிரதேசத்தில் முதலாவது அமைக்கப்பட்ட துறைமுகமாகும்.மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்பு எமது மீன்படித்தொழிலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடலினுள் போடப்பட்டுள்ள பாறாங்கற்களில் கடல் அலைகள் மோதுண்டு திரும்பும் போது எமது தோணிகள் அலையின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவதோடு தொழிலில் ஈடுபடும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன.

இங்கு வரும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எமக்கு பலவிதமான உதவிகள் செய்து தருவதாக வாக்குறுதியளித்தும் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் அடுத்த தேர்தலில்தான் அவர்களைச் சந்திக்க முடியும்.கடலில் ஏதாவது ஆபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈட்டினை பெறுவதென்பது மிகவும் கஷ்டமான காரியமாகவுள்ளது. கரையோர மீன்பிடியாளர்களின் தோணிகள் மீன்பிடித் துறைமுகத்திற்குள் செல்வதற்கான எந்த வசதியும் ஏற்படுத்தக் கொடுக்கப்படவில்லை" என்றார்.

மீனவரான எம்.எஸ்.எம்.சுபைர் கருத்துத் தெரிவிக்கையில் "கடந்த 30 வருடமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன்.இதுவரை பொருளாதார ரீதியில் எந்த முன்னேற்றமும் கிடையாது.டொல்பின் மீன்கள் எமது வலைகளை சேதப்படுத்துகின்றன. அதனை கரைக்கு கொண்டுவந்து திருத்துவதற்கான எந்த வசதிகளும் எமக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவல்லை.

வாரத்திற்கு இம்மீன்பிடித் தொழிலால் 500 தொடக்கம் 2000 ரூபாவிற்குள்தான் வருமானம் பெறக் கூடியதாக உள்ளது. எனக்கு க.பொ.த. உயர்தரத்திலும் க.பொ.த.சாதாரண தரத்திலும் தரம்_8 மற்றும் தரம்_ 6 இல் கல்வி பயிலும் பிள்ளைகள் இருக்கின்றனர் அவர்களை படிப்பிப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உடை மற்றும் ஏனைய செலவுகளுக்கும் குடும்பத்தின் நாளாந்த உணவுச் செலவுகளுக்கும் இப்பணம் போதாமல் உள்ளது. தோணியில் அல்லது வலையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கும் இப்பணத்தில்தான் செலவு செய்ய வேண்டியுள்ளது" என்றார்.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...