கடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 163 குறைவே! | தினகரன்


கடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 163 குறைவே!

கடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 163 குறைவே!-Gas Price Still Low than Mahinda Regiment

 

ரூ. 1,896 ஆக இருந்த கேஸ், டொலர் விலை அதிகரித்தும் ரூ. 1,733

கடந்த ஆட்சியில் ரூபா 2,396 இற்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயுவின் விலை, டொலர் விலை அதிகரித்த போதிலும் தற்போது ரூபா 1,733 இற்கு வழங்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (19) கொழும்பிலுள்ள தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு சிபாரிசு செய்துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் பதிலளித்த அவர்,

2014 ஆம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முகம் கொடுக்க இருந்த வேளையில் எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை குறைத்தது.

கடந்த அரசாங்கம், தேர்லில் தோல்வியடைப்போகின்ற நிலையிலும் ரூபா 2,396 ஆக இருந்த சமையல் எரிவாயுவின் விலையை 2014 டிசம்பரில் ரூபா 500 இனால் குறைத்து, ரூபா 1,896 இற்கே வழங்கியது.

அதன் பின்னர் நாம் ஆட்சிக்கு வந்து ரூபா 1,596 இற்கு சமையல் எரிவாயுவின் விலையை வழங்கினோம்.

கடந்த ஆட்சியில், 2014 ஜனவரி 29 இல் ரூபா 2,396 ஆக இருந்த சமையல் எரிவாயு 2014 டிசம்பர் 07 இல் ரூபா 1,896 ஆக குறைக்கப்பட்டது.

பின்னர் 2015 ஜனவரியில் நாம் ஆட்சிக்கு வந்து, அதனை ரூபா 1,596 ஆக ரூபா 300 இனால் மேலும் குறைத்தோம். பின்னர் 2015 ஜூலையில் ரூபா 1,496 ஆக ரூபா 100 இனால் மேலும் குறைத்தோம். மீண்டும் அதே வருடம் நவம்பர் 23 இல் ரூபா 1,346 ஆக ரூபா 150 இனால் குறைத்தோம். அதன் பின் 2016 நவம்பரில் ரூபா 1,321 ஆக ரூபா 25 இனால் குறைத்தோம்.

அதனைத் தொடர்ந்து 2017 செப்டம்பர் 26 இல் ரூபா 1,431 ஆக ரூபா 110 இனால் அதிகரிக்கப்பட்டது. 2018 ஏப்ரல் 28 இல் ரூபா 1,676 ஆக ரூபா 245 இனால் அதிகரிக்கப்பட்டது.

அது பின்னர் 2018 ஜூன் 30 இல் ரூபா 1,538 ஆக ரூபா 138 இனால் குறைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (19) அது ரூபா 1,733 ஆக ரூபா 95 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில்

கடந்த ஆட்சியில் சமையல் எரிவாயு விலை
2014 ஜனவரியில் ரூபா 2,396
2014 டிசம்பர் 07 ரூபா 1,836 (ரூபா 500 குறைப்பு)

நல்லாட்சி அரசாங்கம்
2015 ஜனவரி 29 ரூபா 1,596 (ரூபா 300 குறைப்பு)
2015 ஜூலை 15 ரூபா 1,496 ((ரூபா 100 குறைப்பு)
2015 நவம்பர் 23 ரூபா 1,346 (ரூபா 150 குறைப்பு)
2016 நவம்பர் 23 ரூபா 1,321 (ரூபா 25 குறைப்பு)
2017 செப்டெ. 26 ரூபா 1,431 (ரூபா 110 அதிகரிப்பு)
2018 ஏப்ரல் 18 ரூபா 1,676 (ரூபா 245 அதிகரிப்பு)
2018 ஜூன் 30 ரூபா 1,538 (ரூபா 138 குறைப்பு)
2018 செப்டெ. 19 ரூபா 1,733 (ரூபா 95 அதிகரிப்பு)
(இன்று)

என அவர் சமையல் எரிவாயு விலை மாற்றத்தை பட்டியலிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

அந்த வகையில், கடந்த ஆட்சியில் ரூபா 1,896 ஆக விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயுவின் விலை தற்போது ரூபா 1,733 இற்கே விற்கப்படுகின்றது.

டொலரின் விலை அதிகரித்த போதிலும், கடந்த ஆட்சியிலும் பார்க்க ரூபா 163 குறைவாகவே தற்போது சமையல் எரிவாயு வழங்கப்படுவதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...