கோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது | தினகரன்

கோரம் இன்மையால் சபை ஒத்திவைக்கப்படுவது இனிமேலும் இடம்பெறக் கூடாது

பாராளுமன்றத்தை கூட்டுவதற்குத் தேவையான கோரம் (கூட்ட நடப்பெண்) இன்மையால் சபை ஒத்திவைக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது. இது விடயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரி நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பத்தில் சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார். கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது கவலைக்குரிய விடயமாகும். உயரிய சபையான பாராளுமன்றமே நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றும் சட்டவாக்க சபையாகவும் காணப்படுகிறது.

சபையில் விவாதங்கள் நடைபெறுவது மாத்திரமன்றி அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக் கூட்டங்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக பொதுமக்களின் நிதி செலவிடப்படுகிறது.

மக்களின் பணத்தைச் செலவிட்டு நடத்தப்படும் பாராளுமன்ற அமர்வுகள் நிதியை வீண்விரயம் செய்வதாக இருக்கக் கூடாது என்றார். சபையை கொண்டுநடத்தும் விடயத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியோருக்குப் பொறுப்பு உள்ளது. இனிவரும் அமர்வுகளில் கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்காது பார்த்துக் கொள்ளுமாறு இரு தரப்பையும் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...