பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் இல்லை | தினகரன்

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் இல்லை

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் கிடையாதென சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாமென கேட்டுக்கொண்ட அமைச்சர், சில ஊடகங்கள் இந்த விவகாரத்தைக்  குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் குற்றவியல் அவதூறு சட்டம் நடைமுறையில் இருக்குமாயின் அத்தகைய ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வானூர்தி தொடர்பான சட்ட மூலம் மீதான விவாதத்தின் போது கூட்டு எதிரணி எம். பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

பலாலி விமான நிலையம் இந்தியாவின் சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு கையளிக்கப்பட மாட்டாது. அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை.

எமது விமானப் படையினரால் பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படும். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ஜோன் அமரதுங்க உட்பட நானும் இணைந்து கூட்டாக ஓர் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்துள்ளோம். இதனடிப்படையில் விமான சேவைகள் அமைச்சு 750 மில்லியனையும் சுற்றுலாத்துறை அமைச்சு 1000 மில்லியனையும் இதற்கென ஒதுக்கவுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் இணக்கப்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 650 மீற்றர் ஓடுபாதையை மேலும் விரிவுபடுத்தவும் நவீன முறையில் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 325 இலக்க விமானம் இறங்குவதற்கு ஏற்ற வகையில் இவை விரிவுபடுத்தப்படும். நேற்றும் இது தொடர்பில் விமானப்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு விமான நிலையமும் விமானப்படையினராலேயே புனரமைக்கப்பட்டது. அதே போன்று பாலாவியும் அவர்களாலேயே புனரமைக்கப்படும். இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்களுக்கு எவரும் அகப்பட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...