சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார் | தினகரன்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91.

1951-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜம், மெட்ராஸ் மாநிலத்தில் முதல்வர் ராஜாஜியின் கீழ் பணிபுரிந்தவர். 7 முதல்வர்களின் கீழ் பணியாற்றியுள்ள ராஜம், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியின் கீழ் பணியாற்றினார்.

1927-ல் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்தார் அன்னா ராஜம் ​ேஜார்ஜ். பள்ளிப் படிப்பை கோழிக்கோட்டில் முடித்தவர் உயர் கல்விக்காக சென்னை வந்தார். பின்னாளில் ஆர்பிஐ ஆளுனர் ஆர்.என்.மல்ஹோத்ராவை மணம் புரிந்தார்.

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வின்போது நேர்காணல் பட்டியலில் இருந்தவர்கள், சிவில் பணி பெண்களுக்குப் பொருந்தாது என்றுகூறி ராஜத்தை இந்திய அயலகப் பணியைத் தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் தன் முடிவில் உறுதியாக நின்ற ராஜம், சிவில் பணியையே தேர்ந்தெடுத்தார்.

ஓசூரில் துணை ஆட்சியராகப் பதவியேற்ற ராஜம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடும் பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்தார். அங்குள்ள கிராமத்துக்குள் புகுந்த 6 யானைகளைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட மறுத்த அவர், அவற்றை வெற்றிகரமாகக் காட்டுக்குள் திருப்பி அனுப்பினார்.

2012-ல் பேட்டியளித்த ராஜம், சென்னை பணி அனுபவம் குறித்து நினைவுகூர்ந்தார்.

அப்போது பேசிய அவர், ''பணிக்கு வந்த புதிதில் முதல்வர் ராஜாஜி பெண்களுக்கு பொதுச் சேவைகள் சரிவராது என்று எண்ணம் கொண்டிருந்தார்.

என்னால் சட்டம் - ஒழுங்கு நிலையைக் கையாள முடியாது என்றும் கூறினார். என்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று அவரிடமே வாதாடினேன். என்னுடைய பணியைப் பார்த்த அவர், பின்னாளில் மக்கள் சூழ்ந்த பொதுக்கூட்டம் ஒன்றில் என்னை முற்போக்கான பெண்ணுக்கான எடுத்துக்காட்டு என்று புகழ்ந்தார்'' என்றார்.

1951-ல் ராஜம் பணிக்குச் சேர்ந்த புதிதில் திருமணத்துக்குப் பின் பெண்கள் பணியைத் தொடர முடியாது என்று அரசாங்க விதிகள் இருந்தன. ஆனால் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவை சீக்கிரத்திலே திருத்தி அமைக்கப்பட்டன.


Add new comment

Or log in with...